இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு
சென்னை: தமிழகத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஐந்து அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் 86.26 விழுக்காடு வாக்குகளும் தாராபுரம் தொகுதியில் 80.31 விழுக்காடு வாக்குகளும் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அரசியல் கட்சி முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் முறைப்படி பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
மதுராந்தகம் தொகுதியின் இயந்திரங்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள மையத்திற்கும் தாராபுரம் தொகுதியின் இயந்திரங்கள் திருப்பூரில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, ஐந்து அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவப்படை, உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 64க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள், கண்காணிப்புக் கோபுரங்கள் மூலம் ‘ஸ்ட்ராங் ரூம்’ 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
அக்டோபர் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 11 மணிக்குள் தேர்தல் முடிவுகள், வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.