📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 07, 2026 07:04 PM

சிங்கப்பூரின் கடல் பாதுகாப்பு பங்களிப்பு: கான் கிம் யோங்

சிங்கப்பூரின் கடல் பாதுகாப்பு பங்களிப்பு: கான் கிம் யோங்

அனைத்துலகக் கடல் பாதுகாப்பு முயற்சிகளுக்குச் சிங்கப்பூர் தனது கடல்சார் அறிவையும் அனைத்துலகத் தொடர்புகளையும் வழங்கிப் பங்களிக்கும் என்று துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை (வர்த்தகம்) அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

‘கெப்பல் பே’ படகுத்துறை வளாகத்தில் உள்ள ‘ஓஷன் எக்ஸ்புளோரர்’ ஆய்வுக் கப்பலில் நடைபெற்ற ‘ஓஷன் எக்ஸ்’ உச்சநிலை மாநாட்டில் புதன்கிழமை (அக்டோபர் 7 ) திரு கான் உரையாற்றினார்.

“கடலை எந்தவொரு தனி நாடும் சொந்தமாக்க முடியாது. அதைத் தனித்துப் பாதுகாக்கவும் முடியாது. வட்டார, அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து சிங்கப்பூர் தனது ஆற்றலை மேம்படுத்தி, பிற நாடுகளுடன் கடல்சார் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளும்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் ‘ஓஷன் எக்ஸ்’ அமைப்பும் இணைந்து 2025ல் ‘மான்சூன் ரைஸ்’ என்ற ஆழ்கடல் பகுதியில் நடத்திய 24 நாள் ஆய்வையும் அவர் சுட்டினார்.

அதில் இந்தோனீசியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் அறிவியல் வல்லுநர்கள் பங்கேற்று, 8,300 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கடல் தளத்தை வரைபடம் மூலம் பதிவுசெய்ததுடன் அரியவகை ஆழ்கடல் உயிரினங்களையும் கண்டறிந்தனர்.

ஐநாவின் திறந்தவெளிக் கடல் ஒப்பந்தத்தை நாடுகள் செயல்படுத்தும்போது இத்தகைய ஆய்வுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றார் திரு கான்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட $60 மில்லியன் மதிப்பிலான தேசிய கடல் அறிவியல் திட்டம், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவும் எனக் குறிப்பிட்ட அவர், ஆய்வுகளை நடைமுறைத் தீர்வுகளாக மாற்ற அரசு, தனியார், கொடை அமைப்புகளின் கூட்டுமுயற்சி அவசியம் என்றார்.

நிகழ்வில் புகழ்பெற்ற ‘அவதார்’, ‘டைட்டானிக்’ படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரனும் கலந்துகொண்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“கடலின் ஆழமான பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க கடலடி இயந்திர மனிதர்கள் மிகவும் அவசியம். பெருங்கடல்களின் கரிமச் சுழற்சியைப் புரிந்துகொண்டால் மட்டுமே பருவநிலை மாற்றத்தின் வேகத்தையும் தாக்கத்தையும் துல்லியமாகக் கணிக்க முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.