இந்தோனீசியா காட்டுத்தீ: ஒரு மாதத்தில் அணைக்க நம்பிக்கை
ஜாகார்த்தா: இந்தோனீசியாவில் பரவி வரும் காட்டுத்தீ இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக அணைக்கப்பட்டுவிடும் என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜும்ஹுர் ஹிதாயத் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஜகார்த்தாவில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற கொள்கை மன்றக் கூட்டத்தில் பேசிய அவர், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவல்படி காட்டுத்தீயின் வீரியம் குறையத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும், மோசமான புகைமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர்கள் மூலம் நீர் தெளிக்கும் பணியில் சிரமம் நீடிப்பதாக அவர் சொன்னார்.
பிற நாடுகளின் உதவிகள் எந்தளவுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்பதை ஆராய்ந்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்தோனீசிய அமைச்சருடன் தொடர்புகொண்டு உதவி வழங்க முன்வந்தார்.
அதேபோல், மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிதியும் செப்டம்பர் மாதம் அதிபர் பிரபோவோவிடம் உதவிபற்றிப் பேசியதாகவும், மலேசியப் பேரிடர் முகமை அனுப்பிய கடிதத்திற்குப் பதில் வரவில்லை என்றும் தெரிவித்தார்.
மத்திய கலிமந்தான், தெற்கு சுமத்ராவில் தீயணைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடும் எல் நினோ பருவநிலையால் ஏற்பட்ட வறட்சியால் ஏறக்குறைய 60,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 6 மாநிலங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடர்ந்த புகை வான்வழிப் பணிகளைப் பாதிப்பதால், பெரும்பாலும் நிலப்பரப்பிலேயே தீயணைப்புப் பணிகள் தொடர்கின்றன.
நிலத்தடி கரிநிலக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என உள்துறை அமைச்சர் டிட்டோ கர்னாவியான் முன்னதாகத் தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தீத்தடுப்பு விதிகளையும் இந்தோனீசியா வலுப்படுத்தி வருகிறது. புதிய ‘தேசிய கரிநில, சதுப்புநில மேலாண்மை முகமை’ அடுத்த வாரத்திற்குள் அமைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.