📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 14, 2026 06:05 PM

இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி, வழிகாட்டுதல்

இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி, வழிகாட்டுதல்

இணையத் தாக்குதல் சம்பவங்களால் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு இரண்டு மணி நேரத்துக்குள் உடனடி ஆரம்பக்கட்ட உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் புதிய உதவித் தொடர்பு எண் சேவையைத் தொடங்கியுள்ளது.

அதிகரித்துவரும் இணையத் தாக்குதல்கள் மற்றும் மோசடிகளுக்கு மத்தியில், பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதும் மேற்கொண்டு உதவி பெற நிபுணர்களிடம் நிறுவனங்களை வழிநடத்துவதும் இலவசமாகச் செயல்படும் இந்தச் சேவையின் முக்கிய நோக்கமாகும்.

புதன்கிழமையன்று (அக்டோபர் 14) நடந்த சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத் தொடக்க விழாவில் இத்திட்டத்தைத் தொடக்கிவைத்து தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் பேசினார்.

“ஒரு சிறிய நிறுவனத்துக்குப் பிரச்சினை ஏற்படும் முதல் சில மணிநேரங்கள் மிகவும் சவால்மிக்கவை. தொடக்கத்திலேயே சரியான நடவடிக்கைகளை எடுப்பது பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு எங்கு தொடங்குவது, யாரை அணுகுவது என்று தெரியாமல் இருக்கலாம். வணிகங்கள் நிச்சயமற்ற நிலையிலிருந்து விரைவாகச் செயல்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுத்து, குறைந்த இடையூறுகளுடன் மீண்டும் மீண்டெழ உதவுவதே இதன் எளிய இலக்காகும். ஏனெனில் ஒரு சம்பவம் நடக்கும்போது, காலம் மிகவும் பொன்னானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட இரண்டாவது சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு நிலை அறிக்கையின்படி, 2025ல் ஆய்வில் பங்கேற்ற பத்து நிறுவனங்களில் கிட்டத்தட்ட ஒன்பது நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஓர் இணையத் தாக்குதல் சம்பவத்தையாவது எதிர்கொண்டுள்ளன.

இது 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில் பத்தில் எட்டு நிறுவனங்களாக இருந்த நிலைமையைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடையே சிங்கப்பூரிலுள்ள 2,000க்கும் மேற்பட்ட வணிகங்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ரான்சம்வேர், தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுதல், சமூகப் பொறியியல் ஆகியவை தொடர்பாக அதிகம் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சிறப்பு இணையப் பாதுகாப்பு ஊழியர்கள் அல்லது முறையான அவசரகாலப் மீட்பு ஏற்பாடுகள் இல்லாத சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழிகாட்டவே இந்த உதவித் தொடர்பு எண் உருவாக்கப்பட்டுள்ளது என்று திரு டான் தெரிவித்தார்.