📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 15, 2026 04:03 AM

ரயில்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் 6 மாதம் வரை சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

ரயில்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் 6 மாதம் வரை சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை, அக். 14:

ரயில் பயணங்களின்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களில் ‘ஹெட்போன்’ அணியாமல் ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். அதிவேக இணைய வசதி பரவலாகக் கிடைப்பதால், நீண்ட தூரப் பயணங்களின் போது பலர் தங்களது மொபைல் போன்களில் உரத்த சத்தத்தில் பாடல்களைக் கேட்பதும், வீடியோக்களைப் பார்ப்பதும், சத்தமாக போனில் பேசுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏசி பெட்டிகள் உள்ளிட்ட மூடிய இடங்களில் இத்தகைய இரைச்சல் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் உறங்கும் பிற பயணிகளுக்குக் கடுமையான தொந்தரவை ஏற்படுத்துவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன.

சக பயணிகளுக்கு இடையூறு: திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவு 145(2)-ன் கீழ் பொதுமக்களுக்கு அமைதியின்மை அல்லது தொந்தரவு ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அபராதம் மற்றும் நடவடிக்கை: முதல் கட்டமாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1,000 உடனடி அபராதம் விதிக்கப்படலாம்; அல்லது பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு ரயிலில் இருந்து பாதியிலேயே கீழே இறக்கிவிடப்படலாம். இந்த அபராதத்தை டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட அதிகாரிகள் வசூலிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6 மாதம் சிறை தண்டனை: ரயில்வே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து சத்தமாக பாடல்கள் அல்லது வீடியோக்களைப் போட்டு தொந்தரவு அளித்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ.5,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

ரயில்களில் அமைதியான சூழலை உறுதிசெய்ய பயணிகள் கட்டாயம் இயர்போன் அல்லது ஹெட்போன்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும், இரவு நேரங்களில் சக பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் குறைந்த சத்தத்தில் செல்போனில் பேச வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அனைத்துக் கோட்டங்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.