📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 14, 2026 08:04 PM

உம்ரா யாத்திரை: சிங்கப்பூரர்களுக்கு பயண ஆலோசனை

உம்ரா யாத்திரை: சிங்கப்பூரர்களுக்கு பயண ஆலோசனை

சவூதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மோசமாக இருப்பதால் சிங்கப்பூர் இ‌ஸ்லாமிய சமயமன்றம் (முயிஸ்) அந்த ஆலோசனையை முன்வைத்துள்ளது.

சவூதி அரேபியாமீது அதிகமான ஏவுகணை, வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதையொட்டி அந்நாட்டுக்கு எல்லா விதப் பயணங்களையும் தள்ளிப்போடுமாறு வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) ஆலோசனை அறிக்கை மூலம் சிங்கப்பூரர்களிடம் கோரிக்கை விடுத்தது.

வெளியுறவு அமைச்சின் அந்தப் பயண ஆலோசனையைப் பின்பற்றுமாறு முயிஸ் அக்டோபர் 14ஆம் தேதி அறிக்கை மூலம் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டது.

பயணத் திட்டங்களைத் தள்ளிப்போடும் ஏற்பாடுகளில் உதவுமாறு உம்ரா யாத்திரைப் பயண முகவர்களை முயிஸ் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது சவூதியில் உள்ள சிங்கப்பூரர்கள் அந்நாட்டு ஆலோசனை அறிக்கைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்றும் தாங்கள் நாடிய பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் ஆகிய தரப்புகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முயிஸ் குறிப்பிட்டது.

தேவைப்படும்போதெல்லாம் தகவல் அளிக்கத் தாங்கள் நடப்பதைத் தொடர்ந்து உன்னிப்பாய்க் கண்காணித்துவருவதாகவும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட்டுவருவதாகவும் முயிஸ் சொன்னது.

சவூதியில் தற்போது இருக்கும் சிங்கப்பூரர்களும் அங்குப் பயணம் செய்யும் அவசியம் இருப்போரும் https://eregister.mfa.gov.sg என்ற இணைய முகவரியில் வெளியுறவு அமைச்சிடம் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.