📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 02:03 PM

எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் கமிஷனர்களுக்குள் அதிருப்தி: மறுக்கிறது தேர்தல் கமிஷன்

எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் கமிஷனர்களுக்குள் அதிருப்தி: மறுக்கிறது தேர்தல் கமிஷன்

புதுடில்லி: எஸ்ஐஆர் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஒரு மனதாகவே எடுக்கப்பட்டன. எந்த நடவடிக்கையிலும் தேர்தல் கமிஷனர்கள் இடையே அதிருப்தி இல்லை என்று தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. ஓட்டுப்பதிவின் போது முறைகேடுகளை தவிர்த்தல், உயிரிழந்தோர் மற்றும் நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர், இருவேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்தோர் உள்ளிட்டடோரை கண்டறிந்து அவர்களை நீக்குவதே எஸ்ஐஆர் நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை சிறப்பான ஒன்று என்ற போதிலும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும் என்று முன்னாள் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி வலியுறுத்தி இருந்தார்.

அதே நேரத்தில், எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் எஞ்சிய இரு தேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன, கடந்த 10 மாதங்களில் மட்டும் பலமுறை தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி இருவரும் ஆட்சேபனை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

எஸ்ஐஆர் நடவடிக்கையின் போது தங்களுக்கு தெரியாமல் 14 சந்தர்ப்பங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அவர்கள் இருவரும் அதிருப்தி தெரிவித்து இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் இடையே கருத்து வேறுபாடு என்பது பேசு பொருளான நிலையில், தலைமை தேர்தல் கமிஷன் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது;

எஸ்ஐஆர் உள்பட தேர்தல் கமிஷனின் அனைத்து முடிவுகளும், ஒருமனதாகவே எடுக்கப்பட்டன. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மற்றும் இரு தேர்தல் கமிஷனர்கள் சுக்பிர்சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலுடன் தான் எடுக்கப்பட்டன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.