சிங்கப்பூரில் பூதமங்கலம் சங்கம் தொடக்கம்
சிங்கப்பூரில் வாழும் பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் பாரம்பரியத்தையும் பூர்வீகத் தொடர்பையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் பூதமங்கலம் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சங்கம் தொடங்கும் எண்ணத்தை முதலில் 2000ஆம் ஆண்டில் ஹாஜி முஹம்மது ரிப்தீன் முன்வைத்தார்.
இந்த உயரிய சிந்தனை, அவருடைய நெருங்கிய நண்பரான அமரர் ஹரீஸுடனான கலந்துரையாடல்களின் மூலம் உருவானது. பூதமங்கலம் மக்களை ஒரே குடையின்கீழ் ஒன்றிணைத்து, சிங்கப்பூரில் வாழும் இச்சமூகத்தினரிடையே ஒற்றுமையையும் உறவுப் பிணைப்பையும் வலுப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இச்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தொடக்க விழா அக்டோபர் 4ஆம் தேதி சிங்கப்பூர் ஃபூட்சிங் சங்கத்தில் நடைபெற்றது. அதில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சி, சங்கத்தின் தொடக்கத்தைக் கொண்டாடுவதுடன், சங்க உறுப்பினர்கள், பூதமங்கலத்திலிருந்து வந்த குடும்பங்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றுகூடி தங்கள் பாரம்பரியத்தை நினைவுகூரவும் சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் வாய்ப்பளித்தது.
“எங்கள் முன்னோர் எந்தச் செல்வமும் இன்றி, தங்கள் சிறிய கிராமத்திலிருந்து வெளியேறினர். அவர்களிடம் இருந்த செல்வங்கள் நம்பிக்கையும் விடாமுயற்சியும்தான். அவர்களைப் போற்றுவதற்கும் அவர்கள் பின்பற்றிய நற்பண்புகள் நிறைந்த பாதையில் நாங்களும் நடப்பதற்கும் இந்தச் சங்கம் ஒரு பாதையாக அமைகிறது,” என்று சங்கத்தின் தலைவர் முகம்மது இட்ரீஸ் கூறினார்.
“நான் பூதமங்கலம் கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்த குடியேறிகளின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவன். இன்றும் அந்தக் கிராமத்துடன் எனக்கு வலுவான தொடர்பு உள்ளது. ஆனால், நமது பிள்ளைகள் தங்கள் பூர்வீகத் தொடர்பை மெல்ல இழந்து வருகின்றனர். இந்த நிலை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பூதமங்கலத்துடன் தொடர்புடைய நமது வரலாற்றையும் அடையாளத்தையும் அவர்களுக்கு நினைவூட்ட ஏதாவது செய்யவேண்டும். குடும்பங்கள் ஒன்றிணைவதுடன், தங்கள் பூர்வீகத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்று சங்கத்தின் துணைத் தலைவர் அஷ்ரப் அலி கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“சிங்கப்பூரில் பூதமங்கலத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 60 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்காக ரத்த தான இயக்கங்கள், சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுப் பயிலரங்குகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சிங்கப்பூரில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். நமது தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்க விரும்பும் அதே வேளையில், மற்ற சிங்கப்பூரர்களும் எங்களுடன் இணைந்து எங்கள் கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம்,” என்று சங்கத்தின் ஆலோசகர் மு.யூ. முகம்மது ரஃபீக் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் அ.முகம்மது பிலாலும் கலந்துகொண்டார்.
“எங்கள் பேரவையின் முக்கிய நோக்கங்கள் கல்வி, பொருளியல், குடும்ப மேம்பாடு ஆகியவையாகும். அந்தப் பணியில் புதிய உறவாகப் பூதமங்கலம் சங்கம் இணைந்துள்ளது. இன்றைய இளையர்கள் பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளனர். அவர்களின் சிந்தனைகளும் கவனமும் சிதறியுள்ளன. பல்வேறு அமைப்புகள் தங்களது வளங்களை ஒன்றிணைத்து, இளையர்களையும் அவர்களது குடும்பங்களையும் அணுகி, சிங்கப்பூரில் அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க உதவ வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“ஒரு மரம், பல வேர்கள். சிங்கப்பூரில் ஒரே சமூகத்துக்குள் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். ஒரு மரத்தின் ஒவ்வொரு வேரும் முக்கியம் என்பதுபோல, ஒவ்வொரு தனிமனிதரும் முக்கியமானவர்,” என்று டாக்டர் ஹமீது ரசாக் கூறினார்.
“பூதமங்கலம் சமூக மக்களை ஒன்றிணைப்பது, அவர்களின் பாரம்பரியத்தையும் வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாப்பது, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இடையிலான தொடர்புகளையும் உறவுகளையும் வலுப்படுத்துவது போன்ற நோக்கங்களுடன் நிறுவன உறுப்பினர்களான திருவாளர்கள் முஹம்மது ரிப்தீன், அஷ்ரஃப் அலி, ஏ.எஸ்.எம்.சித்திக் பாட்சா மூவரும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்,” என்று செயலாளர் முகம்மது ரிப்தீன் கூறுகிறார்
உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் வலுவான, சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்குவதுடன், ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களுக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதாக உணரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கப் பூதமங்கலம் சங்கம் திட்டமிட்டுள்ளது.