சிங்கப்பூர் தரவு மையங்களுக்கு புதிய மசோதா: கட்டுப்பாடு விதிப்பு
சிங்கப்பூரின் முக்கியமான மின்னிலக்கச் சேவைகளுக்கு அடிப்படையாக விளங்கும் பெரிய தரவு மையங்கள், தொடர்ச்சியான செயல்பாடுகள் முதல் இணையப் பாதுகாப்பு வரையிலான பலதரப்பட்ட அபாயங்கள் குறித்து விழிப்புடன் இயங்கவேண்டியிருக்கும்.
அத்துடன், கடுமையான பாதுகாப்பு மற்றும் மீள்திறன் விதிகளுக்கு அவை உட்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 7) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மின்னிலக்க உள்கட்டமைப்பு மசோதா இவற்றை வலியுறுத்துகிறது.
தற்போதைய இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் பெரும்பாலான முக்கியத் தரவு மையங்களை இணைய அச்சுறுத்தல் அறிக்கையிடல் விதிகளுக்கு உட்படுத்தும்.
எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் பேசினார்.
“வெவ்வேறு மின்னிலக்கச் சேவைகள் ஒரே தரவு மையம் அல்லது மேகக் கணினிச் சேவை வழங்குநரையே சார்ந்துள்ளன.
“தடங்கல் ஏற்படும்போது, அதன் பாதிப்பு ஒரு மின்னிலக்கச் சேவையோடு முடிந்துவிடுவதில்லை. ஒரே நேரத்தில் பல சேவைகள் பாதிக்கப்படலாம். மேலும் அதன் தாக்கம் நமது பொருளியலிலும் சமூகத்திலும் விரைவாகப் பரவலாம்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் உள்ள 70 தரவு மையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு மையங்கள், புதிய மசோதாவின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வருவாய் அல்லது மின்திறன் வரம்புகளை எட்டுகின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
சிங்கப்பூர் பயனாளர்களிடமிருந்து மூன்றாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்குக் குறைந்தது $100 மில்லியன் வருவாய் அல்லது குறைந்தபட்சம் 10 மெகாவாட் மின்திறன் தேவைப்படும் செயல்பாடுகள், அந்த வரம்புகளின் ஒரு பகுதி ஆகும்.
அத்தகைய வரம்புகளை எட்டிய நிறுவனங்களின் பெயர்களை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. என்றாலும் அமேசான் வெப் சர்விசஸ், கூகல் கிளவுட் தளம், மைக்ரோசாஃப்ட் அஸூர் போன்றவை அவற்றில் அடங்கக்கூடும்.
அதுபோன்ற முக்கியத் தரவு மையங்களில் பெரும்பாலானவை திருத்தப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும்.
இந்தப் புதிய மசோதா மீதான விவாதம் செவ்வாய், புதன்கிழமைகளில் (அக்டோபர் 6, 7) ஐந்து மணி நேரம் நடைபெற்றன.
மொத்தம் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர்.
தரவு மையங்களின் பொருளியல் மதிப்பு, சிங்கப்பூரின் போட்டித்தன்மை மற்றும் வேலைவாய்ப்புகளில் அவற்றின் தாக்கம், நீடித்த நிலைத்தன்மை, பாதுகாப்பு, மீள்திறன் ஆகியவை குறித்து அவர்கள் பேசினர்.