📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 19, 2026 03:03 PM

சிங்கப்பூர்: இந்தோனீசிய நிறுவனங்களுக்கு புகைமூட்ட அறிவிப்பு

சிங்கப்பூர்: இந்தோனீசிய நிறுவனங்களுக்கு புகைமூட்ட அறிவிப்பு

இந்தோனீசியாவின் கலிமந்தானைச் சேர்ந்த மேலும் மூன்று நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு உத்தரவு அறிவிப்புகளை அனுப்பவுள்ளது.

அங்கு மூண்ட தீச்சம்பவங்கள், சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பதால் அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனையடுத்து, சிங்கப்பூரின் எல்லை தாண்டிய புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

சுற்றுப்புற அமைப்பு திங்கட்கிழமை (அக்டோபர் 19) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுக்குச் சொந்தமான குத்தகை நிலப்பகுதியில் ஏற்பட்ட தீயால் எழும் புகை சிங்கப்பூரை வந்தடைந்திருக்கக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக அமைப்பு தெரிவித்தது.

பிடி புவானா மேகதமா ஜெயா, பிடி மணஞ்சுங் ஹயாக், பிடி பாரதமா புத்ரா பெர்காசா ஆகியவையே அந்த நிறுவனங்கள்.

சுமத்ராவில் ஏற்பட்ட தீச்சம்பவங்கள் தொடர்பாக இந்தோனீசியாவின் ஏழு நிறுவனங்களுக்கு அமைப்பு இதேபோன்ற அறிவிப்புகளை அனுப்பிய மூன்று நாள்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளின்படி, அந்த மூன்று நிறுவனங்களும் தங்களுக்குச் சொந்தமான அல்லது தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியில் எரியும் தீயை அணைக்கவும் அது மேலும் பரவாமல் தடுக்கவும் தீயணைப்புப் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.

மேலும், அவை நிலப்பகுதிக்குத் தீ வைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; புதிய சம்பவங்களில் ஈடுபடக்கூடாது; அத்துடன், தீயை அணைப்பதற்கும் அவை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தச் செயல்முறைத் திட்டங்களையும் சுற்றுப்புற அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

“எல்லை தாண்டிய புகைமூட்டத்தைச் சிங்கப்பூரில் ஏற்படுத்தியதற்குக் காரணமான நிறுவனங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தொடர்ந்து உறுதியுடன் உள்ளது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.