📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 25, 2026 06:03 PM

சிங்கப்பூர் எக்ஸ்போ: மின்சாரம் தாக்கி ஊழியர் மரணம்; மேற்பார்வையாளருக்கு சிறை

சிங்கப்பூர் எக்ஸ்போ: மின்சாரம் தாக்கி ஊழியர் மரணம்; மேற்பார்வையாளருக்கு சிறை

சிங்கப்பூர் எக்ஸ்போ கட்டடத்தின் கூரையில் உள்ள சூரிய ஒளித் தகடுகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்த வழக்கில், கவனக்குறைவாக இருந்ததற்காக மேற்பார்வையாளருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி கட்டடத்தின் கூரையில் சூரிய ஒளித் தகடுகளுடன் இணைக்கப்பட்டிருந்த சேதமடைந்த கம்பி வடத்தை அந்தத் தொழிலாளி வெறும் கையால் பிடித்தபோது, மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.

46 வயதான ராமலிங்கம் குமரேசன் என்ற அந்த மேற்பார்வையாளர் சூரிய ஒளித் தகடுகள் தொடர்பாக வேலை செய்யும் ஊழியர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கத் தவறிவிட்டார் என்று நீதிமன்ற ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், சிங்கப்பூர் எக்ஸ்போவின் 4B மண்டபத்தின் கூரையில் பொருத்தப்பட்ட சூரிய ஒளித் தகடுகளையும் அவர் சரிபார்க்கத் தவறிவிட்டார்.

20க்கும் மேற்பட்ட தகடுகள் தொடராக இணைக்கப்படாமல் இருப்பதையும் அவர் உறுதி செய்யவில்லை.

சம்பவம் நடந்தபோது குமரேசன் மற்றும் உயிரிழந்தவர் ஆகிய இருவருமே ‘இ-டெக் பில்டிங் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.

இந்தியக் குடிமகனான குமரேசன் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தும் குழுவின் மேற்பார்வையாளராகவும், உயிரிழந்தவர் ‘மெக்கானிக்கல்’ குழுவில் தொழிலாளியாகவும் பணியாற்றினர்.

வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களின் பாதுகாப்பையோ அல்லது ஆரோக்கியத்தையோ ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் கவனக்குறைவாகச் செயல்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது 30,000 வெள்ளி வரை அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.