சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை விவகாரம்; ஆறாம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டில் விலக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை விவகாரம்; ஆறாம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டில் விலக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: நாடு முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிப் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஆறாம் வகுப்பில் புதிய மொழியை கற்கத் தொடங்கும் போது, தங்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்றும், திடீரென புதிய மொழியை அறிமுகப்படுத்துவது கற்றலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்னதாக உச்ச நீதிமன்றம், விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தியது ஏன் என்று மத்திய அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பி இருந்தது.
மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘நாடு முழுவதும் உள்ள 28,819 சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 99 சதவீத பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 1.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வி ஆண்டிலேயே 6ம் வகுப்பு மாணவர்களுக்கு அமல்படுத்துவதிலிருந்து மத்திய அரசு பின்வாங்க போவது கிடையாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் மாணவர்களின் வசதி மற்றும் கல்வி சுமையை கருத்தில் கொண்டு மும்மொழிக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்பது தான் எங்களது தரப்பு கருத்தாக உள்ளது. இதில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கு தேவையான வசதியை தான் வழங்க விரும்புகிறோம்.
எனவே நடப்பு கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் இதற்கு ஒன்றிய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள். மும்மொழிக் கொள்கையில் இருந்த் ஆறாம் வகுப்புக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.