ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் இஷா சிங்
இந்தியாவின் இஷா சிங்
நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 10-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதனால் 2-வது ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதிலும் இருவரும் 3-3 என சமநிலையை எட்டினர். தொடர்ந்து நடைபெற்ற 3-வது ஷூட்-ஆஃபில் இஷா சிங் 3-2 என வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த இஷா சிங், தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் ஷியோ ஜியாரூய்சுவானுடன் மோதினார்.
இதில் இருவரும் தலா 38 புள்ளிகள் சேர்த்தனர். இதனால் தங்கப் பதக்கம் யாருக்கு என்பதை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதில் முதல் ஷூட்-ஆஃபில் 4-4 என சமநிலை உருவானது.
ஆனால் அடுத்த ஷூட்-ஆஃபில் இஷா சிங் 2 புள்ளிகளை சேர்க்க ஷியோ ஜியாரூய்சுவான் 3 புள்ளிகளை சேர்த்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். கிம் ஹியான் சுக் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
முன்னதாக, நடைபெற்ற தகுதி சுற்றில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் மனு பாகர் 579 புள்ளிகளுடன் 11-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினார். இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியில் மனு பாகர் பதக்கம் ஏதுமின்றி திரும்புவது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
குல்வீர் சிங்
தடகளத்தில் ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பந்தய தூரத்தை 3:36.72 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின் கசுடோ ஈசாவா பந்தய தூரத்தை 3:36.35 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். 37 விநாடிகளில் குல்வீர் சிங் தங்கப் பதக்கத்தை நழுவ விட்டார்.
ஜப்பானின் நகியா மோரி (3:37.92) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் குல்வீர் சிங் பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். அவர், ஏற்கெனவே 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
பாருல் சவுத்ரிக்கு வெண்கலம்
மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:14.61 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனையான சீமா (15:36.06) 6-வது இடம் பிடித்தார். பக்ரைனின் வில்ஃபிரட் யாவி (15:10.18) தங்கப் பதக்கமும், ஜப்பானின் நோஸோமி தனகா (15:11.65) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் பாருல் சவுத்ரியின் 2-வது பதக்கம் இதுவாகும். அவர், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸிலும் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
14 வயது வீராங்கனையிடம் சுரேகா தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணம் 146-150 என்ற கணக்கில் 14 வயதான தென் கொரியாவின் கங் இயோன்-சியோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதேவேளையில் சிகிடா தனிபார்த்தி, கணேஷ் மணி ரத்னம் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
குத்துச்சண்டையில் 3 பதக்கம் உறுதி
ஆசிய விளையாட்டில் மகளிருக்கான குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் சியோங் சுயோனை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். 60 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பிரியா கங்காஸ் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் மிஜ்கோனா சமடோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஆடவருக்கான 90 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் கபில் பொகாரியா 5-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் கிச்சேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதிக்கு முன்னேறியதன் வாயிலாக இவர்கள் 3 பேரும் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளனர்.
ஸ்குவாஷ் கால் இறுதியில் இந்திய அணிகள்
ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் அனஹத் சிங் தோல்வி அடைந்தார். ஆடவர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தது. இந்திய அணி தரப்பில் வேலவன் செந்தில் குமார், அபய் சிங், வீர் சோட்ரானி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அவினாஷ் சேபிள் ஏமாற்றம்
ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அவினாஷ் சேபிள் பந்தய தூரத்தை 8:21.67 விநாடிகளில் கடந்து 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஜப்பானின் ரியூஜி மியுரா (8:17.3) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், அவரது சகநாட்டைச் சேர்ந்த ரியோமா அயோகி (8:17.60) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், கத்தாரின் ஜகரியா எலகலாமி (8:18.13) 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
முரளி ஸ்ரீசங்கர்
நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி
சீனாவின் யுஹாவோ ஷி (8.17) தங்கப் பதக்கமும், உஸ்பெகிஸ்தானின் அன்வர் அன்வரோவ் (8.06) வெண்கலப் பதக்கமும் வென்றனர். கேரளாவின் பாலக்காடை சேர்ந்த 27 வயதான முரளி சங்கர், கடந்த 2022-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
ஹாக்கி அரை இறுதியில் அக்.1-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் ஹாக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று வங்கதேசத்துடன் மோதியது. இதில் இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 3 கோல்களும் (27, 40, 45-வது நிமிடங்கள்), லக்ரா ஷில்லானந்த் 2 கோல்களும் (44, 45-வது நிமிடங்கள்), அபிஷேக் (3-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (22-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (32-வது நிமிடம்), சஞ்ஜய் (59-வது நிமிடம்), மன்தீப் சிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
லீக் சுற்றில் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்துடன் நிறைவு செய்துள்ள இந்திய அணி அரை இறுதி சுற்றில் வரும் அக்டோபர் 1-ல் பாகிஸ்தானுடன் மோதுகிறது. மற்றொரு அரை இறுதியில் மலேசியா - தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
குராஷில் வெண்கலம்
குராஷ் தற்காப்பு கலை விளையாட்டில் மகளிருக்கான 78 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பிங்கி பல்ஹாரா 0-5 என்ற கணக்கல் தென் கொரியாவின் சுமின் மோவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் பிங்கி பல்ஹாரா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் குராஷ் போட்டியில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் பிங்கி பல்ஹாரா.
இறுதி சுற்றில் இந்திய அணி
4x100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதி சுற்றில் குரிந்தர்வீர் சிங், அபிநயா ராஜராஜன், அனிமேஷ் குஜூர், ஹரிதா பத்ரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 41.54 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வாலிபாலில் வெற்றி
ஆடவருக்கான வாலிபால் போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஹாங் காங்குடன் மோதியது. இதில் இந்திய அணி 25-22, 25-19, 25-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வியட்நாமை வீழ்த்தியிருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
ஈட்டி எறிதலில் யஷ்வீருக்கு வெள்ளி, ரோஹித்துக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் யஷ்வீர் சிங் 85.72 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவ் 84.35 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இலங்கையின் ரமேஷ் பத்திரகே, தனது கடைசி முயற்சியில் 88.33 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 80.29 மீட்டர் தூரம் எறிந்து 4-வது இடம் பிடித்தார்.
கிரிக்கெட்டில் அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேற்றம்
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று கால் இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
எனினும் ஐசிசி தரவரிசையின்படி முதலிடத்தில் உள்ள இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது. 10-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியது. அரை இறுதியில் இந்திய அணி நேபாளம் அல்லது இலங்கையுடன் மோதக்கூடும்.