அதிகரித்து வரும் டெங்கு பரவல் ஒரே நாளில் 283 பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் ஒரு வாரமாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 16ம் தேதி மட்டும், 283 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தாண்டில், இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை, அரசு தீவிரப் படுத்தி வருகிறது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் பாதிப்பு, இம்மாதம், 14ம் தேதி, 61 என்ற எண்ணிக்கையில் இருந்தது. கடந்த 16ல், 283 ஆக உயர்ந்தது. அதேநேரம், 17ம் தேதி, 244 ஆக குறைந்தது.
தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு காணப்படுகிறது. இது பருவகால மாற்றம் என்பதால், டெங்கு பாதிப்பு உள்ளது; பொது மக்கள் அச்சப்படும் அளவிற்கான பாதிப்பு இல்லை. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் போதிய அளவில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்படும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வருமுன் காப்பது சிறந்தது என்பதால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசு பரவாமல் தடுக்க, வீட்டை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டு உள்ளது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
டெங்குவால் இதுவரை, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் காய்ச்சல் பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தும்படி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, கொசு மருந்து தெளிப்பு பணிகள், பல மாவட்டங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளன.