📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 18, 2026 02:34 PM

தைவான் பேருந்து விபத்தில் சிங்கப்பூரர் உயிரிழப்பு

தைவான் பேருந்து விபத்தில் சிங்கப்பூரர் உயிரிழப்பு

தைச்சுங்: தைவானுக்குக் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாது ஒருவர்மீது பேருந்து ஏறியிருந்தது.

அதற்கு இரு நாள்களுக்குப் பிறகு சிங்கப்பூரரான அவர் உயிரிழந்துவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதிலிருந்து அவர் காப்பற்றப்பட்டதாகவும் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த 67 வயது மாதுக்கு சீன மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் (China Medical University Hospital) சிகிச்சையளிக்கப்பட்டது. அவரை மீட்க முடிந்தவரை முயற்சி செய்ததாகவும் அவருக்குத் தாங்கள் தீவிர சிகிச்சையளித்ததாகவும் அந்த மருத்துவமனை கூறியது என்று தைவானிய ஊடகமான ஃபோக்கஸ் தைவான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) தெரிவித்தது.

மோசமான காயங்களுக்கு ஆளானதால் அவர் உயிரிழந்ததாக ஃபோக்கஸ் தைவான் குறிப்பிட்டது. மருத்துவமனை எழுத்து வடிவில் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் இதனைத் தெரிவித்தது.

தைவானின் தைச்சுங் நகரில் புதன்கிழமை (செப்டம்பர் 16) காலை 11 மணியளவில் அந்த மாது சாலையைக் கடந்துகொண்டிருந்தார். அப்போது வலது பக்கம் திரும்பிக்கொண்டிருந்த ஒரு பேருந்து மோதியபின் அவர்மீது ஏறியது.

அவசரச் சேவைப் பணியாளர்கள் அவரை மீட்டதாகப் பல்வேறு ஊடகங்கள் தெரிவித்தன.

மாதுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரின் வலது கை, இடது கால், இடை ஆகிய உடல் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மாரடைப்புக்கு ஆளான அவரின் இதயத் துடிப்பு மருத்துவமனையில் மீண்டும் செயலுக்குக் கொண்டுவரப்பட்டது.