அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் பட்டியலில் சிங்கப்பூர் வோங் முதலிடம்; டாப் 5 பட்டியல் இதோ!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதையடுத்து, அந்நாட்டு பிரதமரின் ஆண்டு வருமானம், 64 சதவீதம் உயர்ந்து, 27 கோடி ரூபாயாக அதிகரிக்கிறது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்து சிறந்த திறமையாளர்களை அரசியலுக்கு ஈர்ப்பதற்காகவும், ஊழலற்ற ஆட்சியை தொடர்வதற்கும் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், அமைச்சர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனால், உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் அமைச்சர்களைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் விளங்கி வருகிறது.
சிங்கப்பூரில் கடைசியாக, 2012ல் அமைச்சர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது மக்களின் எதிர்ப்பு காரணமாக, 36 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன்பின், 2017, 2023ல் சில காரணங்களால் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
அதன் பிறகு தற்போதுதான் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்த உயர்வு வரும், அக்., 15 முதல் அமலாக உள்ளது.
இதன்படி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு வருமானம், 21 கோடி ரூபாயில் இருந்து, 64 சதவீதம் அதிகரித்து, 27 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனக்கு கிடைக்கும் ஊதிய உயர்வை அறப்பணிகளுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக வோங் அறிவித்தார்.
இந்த ஊதிய உயர்வைத் தொடர்ந்து உலகிலேயே ஆண்டு வருமானம் பெரும் பிரதமர்களின் வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங் உள்ளார்.
டாப் 5 தலைவர்கள்
உலக அளவில் அதிக ஆண்டு சம்பளம் வாங்கும் தலைவர்கள் (ரூபாயில்)
1. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்- ரூ.27 கோடி
2. ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ- ரூ.6.79 கோடி
3. சுவிட்சர்லாந்து அதிபர் கை பெர்மெலின்- ரூ.5.73 கோடி
4. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- ரூ.3.78 கோடி
5. பிரான்ஸ் பிரதமர் ஆன்டி பர்ஹாம்- ரூ.2.18 கோடி
அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டு சம்பளம் ரூ.33.60 லட்சம் ஆகும்