Asian Games: வில்வித்தையில் வெண்கலம் வென்று கணேஷ் மணி ரத்னம் புதிய சாதனை
Asian Games: வில்வித்தையில் வெண்கலம் வென்று கணேஷ் மணி ரத்னம் புதிய சாதனை
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் ஆடவர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய இளம் வீரர் கணேஷ் மணி ரத்னம் திருமூரு வெண்கலப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். அனல் பறந்த வெண்கலப் பதக்கப் போட்டியில் வியட்நாம் வீரரை 149-144 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.
நகோயாவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்தியாவின் கணேஷ் மணி ரத்னம், வியட்நாம் நாட்டின் காங் துக் டாங்கை எதிர்கொண்டார். தொடக்கத்திலிருந்தே துல்லியமாக குறிபார்த்து அம்புகளை எய்த கணேஷ், முதல் சுற்றில் 30-29 என முன்னிலை பெற்றார். 2வது சுற்றிலும் தொடர்ந்து அடுத்தடுத்து 10 புள்ளிகளை குவித்து 60-58 என முன்னிலையை தக்கவைத்தார்.
3வது சுற்றிலும் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை தொடர்ந்த அவர், தொடர்ந்து 9 அம்புகளையும் 10 புள்ளிகளுக்குள் செலுத்தி 90-88 என முன்னிலை வகித்தார். 4வது சுற்றில் 10, 9, 10 என புள்ளிகளை எடுத்து 119-116 என வெற்றியை நெருங்கினார்.
கடைசி மற்றும் 5வது சுற்றில் மீண்டும் சீறிப்பாய்ந்த கணேஷ் மணி ரத்னம், தொடர்ச்சியாக 10, 10, 10 என மூன்று 10 புள்ளிகளை குவித்து 149-144 என்ற புள்ளிக் கணக்கில் வியட்நாம் வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மொத்தம் எய்த 15 அம்புகளில் 14 அம்புகளை மிகத் துல்லியமாக 10 புள்ளிகளுக்குள் செலுத்தி கிரிக்கெட் உலகையும் விளையாட்டு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவின் கிம்மிடம் போராடி தோல்வியடைந்த போதிலும், மன உறுதியை தளரவிடாமல் வெண்கலப் பதக்கப் போட்டியில் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
கணேஷ் மணி ரத்னத்தின் இந்த வெண்கலப் பதக்கத்துடன், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய காம்பவுண்ட் வில்வித்தை அணி தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மகளிர் அணிகள் பிரிவு தங்கம், கலப்பு அணிகள் பிரிவு தங்கம், ஆடவர் அணிகள் பிரிவு தங்கம் மற்றும் ஆடவர் தனிநபர் வெண்கலம் என மொத்தம் 3 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வாரிக்குவித்து இந்திய வில்வித்தை அணி ஆசிய அரங்கில் புதிய சகாப்தம் படைத்துள்ளது.