ஜெம் வீரமணி மீதான பாலியல் தொடர்பான வழக்கில் அனைத்து வீடியோக்களும் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் வெளியான நிலையில் அந்த விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று துளிர் அறக்கட்டளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த வழக்கு தொடர்பான வீடியோ, ஆடியோ மற்றும் ஆதாரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், 15 வலைதளங்களில் இன்னும் அந்த வீடியோக்கள் முடக்கப்படாமல் உள்ளது.
எக்ஸ் வலைத்தளத்தில் இந்த வீடியோக்கள் இன்னும் உள்ளன என்று கூறி எக்ஸ் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களை நீதிபதியிடம் காட்டினார். அப்போது, துளிர் அறக்கட்டளை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் நிலையத்தில் வீரமணி மற்றும் சிறுமிகளிடம் விசாரணை செய்வது போன்ற காட்சியை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டிருப்பதாக தெரிவித்தனர்.
அந்த காட்சிகளை பார்வையிட்ட நீதிபதி, செயற்கை தொழில்நுட்பத்தில் காட்சிபடுத்தியிருப்பதாகவும், இந்த நேரத்தில் இதுபோன்ற செய்திகளை ஏன் வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பி சம்மந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதி குமரகுரு, நீதிமன்ற உத்தரவுக்கு பின் சிறுமிகள் தொடர்பான காட்சிகளை முடக்க கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸை பெற்ற நிறுவனங்கள் அனைத்து வீடியோக்களையும் உடனடியாக முடக்கம் செய்துள்ளது.
முடக்கப்படாத வீடியோக்கள் இருந்தால் அவற்றையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் தொலைக்காட்சிகளுக்கும் வீடியோக்களை ஒளிபரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை நீக்கப்படாமல் எக்ஸ் தளத்தில் உள்ள பதிவுகளை நீக்க ஒன்றிய அரசு தரப்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான வீடியோ பதிவுகள் முடக்கப்படவில்லை என்றால் அவற்றை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பத்திரிகைகளின் சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தான் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. அதனால், ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை ஊடகங்கள் விவாதம் நடத்தாமல் இருக்கலாமே? என்று கருத்து தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.