📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 14, 2026 12:33 AM

“80 சதவீத இந்தியர்கள் அசைவம் உண்பவர்கள்”

“80 சதவீத இந்தியர்கள் அசைவம் உண்பவர்கள்”

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டு சிறப்பு இரவு விருந்துக்கான உணவுப் பட்டியலில் சைவ உணவுகள் இடம்பெற்றதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

18-வது பிரிக்ஸ் மாநாடு நேற்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் மசூத் பெசஸ்கியான் மற்றும் பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிக்ஸின் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற தலைவர்களுக்கு சிறப்பு விருந்தாக சைவ உணவை இந்திய அரசு வழங்கி உள்ளது. அது குறித்த மெனு சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் ராகுல் காந்தி அதை விமர்சித்துள்ளார்.

“80 சதவீத இந்தியர்கள் அசைவம் உண்பவர்கள். இதை பதிவுக்காக சொல்கிறேன். இந்திய அசைவ உணவுகள் சுவையானதாக இருக்கும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். இதோடு தனது சகோதரியின் சோலா பூரியையும் (Chole Bhature) அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு தரவுகளின் படி (2019-21) இந்தியாவில் 83.4% ஆடவர்களும், 70.6% பெண்களும் அசைவம் உண்பதாக தெரிவித்துள்ளனர். மீன், கோழி மற்றும் ஆட்டின் இறைச்சியை அவ்வப்போது உண்பதாக அவர்கள் கூறியுள்ளதாக தகவல்.

“பிரிக்ஸ் மாநாட்டில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கூட காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதை நம்ப முடியவில்லை. இந்திய சைவ உணவுகளை விருந்தினர்கள் விரும்பி உண்டனர். அது சுவையும், ஊட்டச்சத்தும் நிறைந்தது” என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.