📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 11, 2026 04:33 PM

22 ஆண்டுகால வழக்கிலிருந்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விடுதலை.. திஹார் சிறை சென்றவர்

22 ஆண்டுகால வழக்கிலிருந்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விடுதலை.. திஹார் சிறை சென்றவர்

22 ஆண்டுகால வழக்கிலிருந்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விடுதலை.. திஹார் சிறை சென்றவர்

மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின், 22 ஆண்டுகள் நீடித்த குற்றவழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு சென்ற பிரிட்டனுக்கு கிரிக்கெட் பயணம் தொடர்பான வழக்கில் டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது. வதோதராவைச் சேர்ந்த இவர் மீது மோசடி, ஏமாற்றுதல், கிரிமினல் சதி மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு 2004 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மூலம் தொடங்கியது. இதில் போலி இங்கிலாந்து குடியேற்ற முத்திரை, சந்தேகத்திற்குரிய பயண ஏற்பாடுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ஆனால், இவை எதுவும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டுகளுக்கு காரணமான அஜ்வா ஸ்போர்ட்ஸ் கிளப் மார்ட்டினுக்கு சொந்தமானது என்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் நீதிமன்றம் கண்டறியவில்லை. அரசுத் தரப்பு சாட்சிகள் போதிய ஆதரவு அளிக்காததால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போது மார்ட்டினுக்கு 54 வயது ஆகிறது. இந்த தீர்ப்பு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவரது வாழ்க்கையையும் விளையாட்டு வாழ்க்கையையும் பாதித்த ஒரு அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மார்ட்டின் பெயர் பெற்றிருந்தார். பரோடாவில் பிறந்த இவர், விக்கெட்டை தக்கவைத்து விளையாடுவதில் வல்லவர். 1998-99 ரஞ்சி டிராபி தொடரில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

மார்ட்டின் 138 முதல்தர போட்டிகளில் விளையாடி, 23 சதங்களுடன் 9000 க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 46 ஆகும். இவரது தலைமையில் 2000-01 இல் பரோடா அணி ரஞ்சி கோப்பையை வென்றது. பின்னர் பரோடா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றினார்.

அதேநேரம் சர்வதேச கிரிக்கெட்டில் இவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர், 158 ரன்கள் மட்டுமே எடுத்தார். 1999 இல் டொராண்டோவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இவர் அறிமுகமானார்.

2004 ஆம் ஆண்டு மார்ட்டினுடன் தொடர்புடைய ஒரு கிரிக்கெட் குழு இங்கிலாந்துக்குச் சென்றது. பெரும்பாலான வீரர்கள் இந்தியா திரும்பினர். ஆனால் ஒருவர் மட்டும் ஆறு மாத விசா காலத்தை தாண்டி அங்கேயே தங்கிவிட்டார். அவர் போலி இங்கிலாந்து குடியேற்ற முத்திரையை பயன்படுத்தி இந்தியா திரும்பியபோது டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார்.

ஆரம்ப எஃப்.ஐ.ஆரில் தனது பெயர் இல்லை என்றும், தான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதால் பின்னர் இதில் சேர்க்கப்பட்டதாகவும் மார்ட்டின் கூறுகிறார். "2004 இல் எனது குழு ஒன்று விளையாட இங்கிலாந்து சென்றது. ஒரு வீரரைத் தவிர அனைவரும் திரும்பினர். அந்த ஒரு நபர் போலி முத்திரை மூலம் அங்கு தங்கியிருந்து, இந்தியா திரும்பிய போது பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே என் பெயர் இதில் சேர்க்கப்பட்டது," என்று மார்ட்டின் கூறினார்.

ஆனால் காவல்துறை வேறு குற்றச்சாட்டை முன்வைத்தது. மார்ட்டினும் அவரது நண்பர்களும் கிரிக்கெட் பயணம் என்ற பெயரில் பணம் வாங்கிக்கொண்டு அந்த வீரரை அனுப்பியதாக குற்றம் சாட்டினர். இது சட்டவிரோத குடியேற்றம் என்றும் கூறப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் காரணமாக மார்ட்டின் டெல்லியில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில் இவர் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் ரன்ஜி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, வழக்கு நிலுவையில் இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.

விளையாட்டுத் துறைக்கு வெளியேயும் இந்த வழக்கு அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. வழக்கின் காரணமாக ரயில்வேயில் இருந்த வேலை பறிபோனது. பிசிசிஐ உடனும் இவரால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. இரண்டு தசாப்த கால மன உளைச்சல் இவரைப் பாதித்தது.

நீதிமன்ற வழக்கு மட்டுமின்றி, 2018 டிசம்பரில் வதோதராவில் நடந்த சாலை விபத்தில் மார்ட்டின் படுகாயமடைந்தார். அவரது நுரையீரல் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். அப்போது அவரது முன்னாள் சக வீரர்களும் கிரிக்கெட் நிர்வாகிகளும் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க உதவினர்.இங்கிலாந்து பயணம் நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மார்ட்டினின் நீண்ட வழக்குப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.