📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 11, 2026 03:34 PM

"இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்..".. இஷான் கிஷன் குறித்து தேர்வாளர் அதிரடி கணிப்பு

"இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்..".. இஷான் கிஷன் குறித்து தேர்வாளர் அதிரடி கணிப்பு

"இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் இவர்தான்..".. இஷான் கிஷன் குறித்து தேர்வாளர் அதிரடி கணிப்பு

சென்னை: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் கொண்டவர் என்று கிழக்கு மண்டல தேர்வாளர் மனிஷ் வர்தன் கூறி இருக்கிறார். சமீபத்தில் 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணியை கேப்டனாக வழிநடத்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து இருந்தார் இஷான் கிஷன்.

தென் மண்டல அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் தனது பேட்டிங்கில் மட்டுமின்றி, கேப்டன்சியிலும் மிரட்டினார். முதல் இன்னிங்சில் 270 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 80 ரன்களும் விளாசி மொத்தம் 350 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டினார். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கிழக்கு மண்டல அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய கிழக்கு மண்டல தேர்வாளரும் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரருமான மனிஷ் வர்தன், "நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகே இஷான் கிஷனை கேப்டனாக நியமித்தோம். அதேபோல், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு கூடுதல் பொறுப்பை வழங்கும் நோக்கில் அவரைத் துணை கேப்டனாக நியமித்தோம். அந்த முடிவு மிகச் சிறப்பாகக் கைகொடுத்துள்ளது" என்றார்.

மேலும் இஷான் கிஷனின் கேப்டன்சி குறித்துப் பேசிய அவர், "வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) மற்றும் சிவப்புப்பந்து (டெஸ்ட்) கிரிக்கெட் இரண்டிலும் இஷான் கிஷன் தற்போது மிகுந்த முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் கம்பேக் கொடுத்த விதம் அசாத்தியமானது. இந்திய டெஸ்ட் அணியில் விளையாட மட்டுமல்லாமல், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக செயல்படவும் அவருக்கு முழுத் தகுதி உள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் அபார திறமை அவரிடம் உள்ளது" என்று புகழாரம் சூட்டினார்.

சையத் முஷ்டாக் அலி மற்றும் துலீப் டிராபி ஆகிய இரண்டு முக்கிய உள்நாட்டுத் தொடர்களிலும் கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்துள்ள இஷான் கிஷன், இந்திய டெஸ்ட் அணியின் எதிர்கால தலைமைக்கான ரேசில் தனக்கான ஒரு வலுவான இடத்தை பிடித்துள்ளார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.