வழிகாட்டிப்பலகையில் இந்தி மொழி: இரண்டு பொறியாளர்கள் பணிநீக்கம்
சென்னை: தமிழக அரசின் இருமொழிக் கொள்கையை மீறும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டிப்பலகையில் இந்தி எழுத்துகளை இடம்பெறச் செய்த புகாரின் பேரில், மாநில நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த இரு பொறியாளர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்-நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட வழிகாட்டிப்பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இது பொதுமக்களிடையேயும் பல்வேறு தரப்பினர் இடையேயும் விவாதப்பொருளாக மாறியது.
இதையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து, வழிகாட்டிப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் உடனடியாக நீக்கப்பட்டன.
இந்நிலையில், அரசின் கொள்கைக்கு மாறாகச் செயல்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது துறைரீதியான தீவிர விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு (தமிழ், ஆங்கிலம்) எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மீது எவ்வித தயவும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக்குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.