📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 08, 2026 01:03 AM

விலங்கு வதை: பறவை துன்புறுத்தல் குறித்து விசாரணை

விலங்கு வதை: பறவை துன்புறுத்தல் குறித்து விசாரணை

பறவை ஒன்றின் அலகும் சிறகுகளும் ஒட்டுப்பட்டையால் (taped up) கட்டப்பட்ட நிலையில், ஒரு மாது அதைத் துன்புறுத்துவது போன்று இணையத்தில் பரவிய காணொளிகள் குறித்து தேசியப் பூங்காக் கழகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தொடர்புடையவரிடம் விசாரணை நடைபெறுகிறது என்றும் தவறிழைத்தது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கழகத்தின் அமலாக்க, விசாரணைப் பிரிவின் குழு இயக்குநர் ஜெஸிக்கா குவோக், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

விலங்குவதை தொடர்பான புகார்களை அமைப்பு கடுமையாக எடுத்துக்கொள்ளும் என்றார் அவர்.

ஃபேஸ்புக்கில் செப்டம்பர் 29ஆம் தேதி பதிவிடப்பட்டு, பின்னர் நீக்கப்பட்ட அக்காணொளிகளில், மைனா போன்ற ஒரு பறவையின் அலகும் சிறகுகளும் ஒட்டுப்பட்டையால் கட்டப்பட்டிருந்தன. அப்பறவை தமது வீட்டிற்குள் அடிக்கடி புகுந்து உணவைச் சாப்பிட்டதால் அதைப் பிடித்ததாக அப்பெண் கூறுகிறார். பறவையைக் காலணிப் பெட்டிக்குள்ளும் நெகிழிப் பையிலும் அடைத்து வைத்து அவர் திட்டுவது அதில் பதிவாகியுள்ளது.

அதற்கு விலங்குவதைத் தடுப்புச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“வீட்டிற்குள் விலங்குகள் நுழைவது எவ்வளவு எரிச்சலூட்டினாலும், அதைத் துன்புறுத்துவது நியாயமாகாது. இத்தகைய தண்டனைகள் முற்றிலும் தவறான வழிகாட்டுதலாகும்,” என்று அது கூறியது.

“உணவை மூடி வைப்பது, சன்னல்களில் வலை அமைப்பது போன்ற கருணையுள்ள வழிகளில் பறவைகள் நுழைவதைத் தடுக்கலாம். நகர்ப்புறச் சூழலில் விலங்குகளுடன் இணைந்து வாழ பொறுமையும் நடைமுறை மாற்றங்களும் அவசியம்,” என்று சங்கம் குறிப்பிட்டது.