“2047-க்குள் வளர்ந்த இந்தியாவை நிச்சயம் உருவாக்குவோம்”
புதுடெல்லி: 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது உள்பட நமது இலக்குகள் அனைத்தையும் நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டின் இதே நாளில் (அக்டோபர் 7) குஜராத்தின் முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. மூன்று முறை முதல்வராக பதவி வகித்த அவர், பின்னர் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: வாக்கு அரசியல் காரணமாக சமூகம் பிளவுபட்டிருப்பது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. ஒரு விவசாயியின் வயலில் தண்ணீர் இல்லாவிட்டால், அது ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் பாதிக்குமா? மின்சாரம் இல்லாவிட்டால், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பாதிக்குமா? இல்லை என்பதே இதற்கான பதில். பிரச்சினை அனைவருக்குமானது எனும்போது, அதற்கான தீர்வும் அனைவருக்குமானதாகவே இருக்க வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் 40 கோடிக்கும் குறைவாக இருந்தோம். இன்று 140 கோடிக்கும் அதிகமாக இருக்கிறோம் 140 கோடி மக்களும் இணைந்து 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். நிச்சயமாக நாம் அதைச் செய்வோம். உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக நாம் உருவெடுப்போம். நிச்சயமாக நாம் அதைச் செய்வோம். உலகளாவிய உற்பத்தி மையாக இந்தியாவை மாற்றுவோம். நிச்சயமாக நாம் அதைச் செய்வோம். ஒலிம்பிக் போட்டியை நடத்துவோம். நிச்சயமாக நாம் அதைச் செய்வோம். விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வோம். நிச்சயமாக நாம் அதைச் செய்வோம். இந்த ஆற்றல், இந்த உற்சாகம், இந்த நம்பிக்கை அசாதாரணமானவை.
இஸ்ரேல் சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க ஃபிளை துபாய் விமானத்தின் துணை விமானி முயன்றபோது, தான் கத்தியால் குத்தப்ட்ட நிலையிலும் அந்த சதியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் குறித்தே இன்று உலகம் பேசுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பற்றியும் உலகம் பேசும் ஒரு நாள் வரும்.
தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகள் மற்றும் இடைவிடாத கடின உழைப்பின் மூலம் இந்த இலக்குகுள் அடையப்படும். இந்தியா சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், நம்மிடம் 140 கோடி தீர்வுகள் உள்ளன.
என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாட்டு மக்கள் முன் நான் தலைவணங்குகிறேன். என்னைப்பொறுத்தவரை மக்களே கடவுள். கடினமாக உழைக்கும் பாஜக தொண்டர்களே எனது பலம். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த சக ஊழியர்களுக்கும், ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.