”விஜய் அமைதியாக தெரிகிறார்; ஆனால், ஹிட்லர் ஆட்சி”
”விஜய் அமைதியாக தெரிகிறார்; ஆனால், ஹிட்லர் ஆட்சி” - டிடிவி தினகரன் விமர்சனம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மூக்கையாத் தேவரின்47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் பேசுகையில், ”தவெக ஆட்சி குறித்து சொல்ல வேண்டும் என்றால், சினிமா துறையிலிருந்து வந்துள்ளார்கள் என மக்கள் நம்பி வாக்களித்தார்கள். ஆனால், ஆரம்பத்திலேயே அதிமுக எம்எல்ஏ 25 பேரை நடுரோட்டில் நிறுத்தினார்கள். வாக்குறுதிகளை தந்திரமாக நிறைவேற்றுவது மாதிரியும் இருக்க வேண்டும்; நிறைவேற்றாத மாதிரியும் இருக்க வேண்டும் என செயல்படுத்துகிறார்கள்.
அண்ணா காலத்தில் இளைஞர்கள் தான் மாற்றத்தை கொண்டு வந்தார்கள். ஆனால், இங்கு யாருக்காவது அடிப்படை புரிதல் இருக்கிறதா? என கூட தெரியவில்லை. முதல்வருக்கு கூட எழுதி வைத்ததை கூட சரியாக பேச தெரியவில்லை. நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசுவது, திமுக, அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேசுவதை உதாசீன படுத்துவது போன்று இருக்கிறது.
ஆட்சி அமைத்ததும் தில்லு முல்லு செய்து, பணம் தருகிறேன் என சொன்னதால் தான் மாற்றுக் கட்சியினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தி விட்டார்கள். இவர் அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்., இந்த ஆட்சியை சொல்ல வேண்டுமென்றால் ஹிட்லர் ஆட்சி தான் நடக்கிறது. விஜய் அமைதியாக தெரிகிறாரே தவிர மிகவும் நரித்தனமாக, தந்திரமாக, செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், நாளை சட்டமன்றத்தில் அவரது பேச்சு சினிமா வசனம் போல தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.