வீரமணி போக்சோ வழக்கில் மேலும் மூவர் கைது
சென்னை: தொழிலதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் மேலும் மூவர் கைதாகியுள்ளனர்.
சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வீரமணியின் பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஓட்டுநர்களான லாசர், பார்த்திபன், பாபு ஆகிய மூன்று பேரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு திங்கட்கிழமை (அக்டோபர் 5) கைது செய்துள்ளது.
காவல்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த பல ஆண்டுகளாக வீரமணியிடம் பணியாற்றி வந்த அந்த ஓட்டுநர்களே, சிறுமிகளை அழைத்து வருவதற்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்குத் துணை நின்றதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது எட்டு கைப்பேசிகள், 55 முக்கியமான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கெனவே வீரமணி மீது ஐந்து போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாகச் சாந்தி, மகேந்திர சிம்ஹன், கணேசன் ஆகிய மூவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஓட்டுநர்கள் மூவர் கைது செய்யப்பட்டதன் மூலம், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.