📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 06, 2026 11:03 PM

பேருந்தில் போதை பெண்ணின் அதிரடி அட்டகாசம்; பயணிகள் முகம் சுளிப்பு

பேருந்தில் போதை பெண்ணின் அதிரடி அட்டகாசம்; பயணிகள் முகம் சுளிப்பு

சென்னையில் நள்ளிரவில் இயக்கப்பட்ட மாநகர சொகுசுப் பேருந்தில், மதுபோதையில் இளம்பெண் ஒருவர் சக பயணிகளிடம் வம்பு இழுத்து, அவர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுபோதையில் பேருந்தில் பயணம்

சென்னை மாநகர சொகுசுப் பேருந்தில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு நேரத்தில் சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அவர் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது, பேருந்தில் அமருவதற்கு சீட் கேட்பது தொடர்பாக சக பயணிகளுக்கும் அந்த பெண்ணுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

பயணிகள் மீது தாக்குதல்

மதுபோதையில் இருந்த அந்த இளம் பெண், தன்னைத் தட்டிக்கேட்ட சக பயணிகளைப் பார்த்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், “இது என்ன உங்க அப்பன் வீட்டு பஸ்சா”என ஆக்ரோஷமாக கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்தின் முன்புறம் உள்ள கண்ணாடிக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்தார். இதனால் பேருந்துக்குள் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அப்பெண், சக பயணிகளை நோக்கிப் பாய்ந்து அவர்களைக் கைகளாலேயே சரமாரியாகத் தாக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதனை தட்டிக்கேட்ட ஒரு சக பெண் பயணியின் தலை முடியைப் பிடித்து இழுத்து அவரை தாக்கினார். பேருந்துக்குள் இருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் எடுத்த இந்த ரகளை வீடியோ, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

போலீசார் விசாரணை

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் இடையூறு விளைவித்த இந்த சம்பவம் தொடர்பாக, வைரலாகும் வீடியோ ஆதாரத்தைக் கொண்டு சென்னை மாநகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகளையில் ஈடுபட்ட அந்த பெண் யார், அவர் எங்கிருந்து பேருந்தில் ஏறினார் என்பது குறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் அரசுப் பேருந்திற்குள் பெண்ணொருவர் போதையில் சக பயணிகளைத் தாக்கிய சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.