வெறும் 2 சென்டிமீட்டரில் நழுவிய தங்கம்.. ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற ஆன்சி சோஜன்
வெறும் 2 சென்டிமீட்டரில் நழுவிய தங்கம்.. ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற ஆன்சி சோஜன்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் வெறும் 2 சென்டிமீட்டர் இடைவெளியில் தங்கப் பதக்கத்தை நழுவவிட்டு வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆன்சி சோஜன் 6.53 மீட்டர் தூரம் தாண்டி நீண்ட நேரம் முதல் இடத்தில் நீடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால், போட்டியின் கடைசி வாய்ப்பில் சீனாவின் ஹுவாங் யிங்யிங் அபார பாய்ச்சலை வெளிப்படுத்தி 6.55 மீட்டர் தூரம் தாண்டினார். வெறும் 2 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை சீன வீராங்கனை கடைசி நொடியில் தட்டிச் செல்ல, ஆன்சி சோஜன் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆன்சி சோஜன் தொடர்ந்து வெல்லும் 2-வது வெள்ளிப் பதக்கம் இதுவாகும். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு நட்சத்திர இந்திய வீராங்கனையான ஷைலி சிங் 4-வது இடத்தைப் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார். சீனாவின் மெங்யி டான் 6.46 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தைப் பிடித்தார்.
ஆசிய விளையாட்டு வரலாற்றில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் கடந்த 2002-ல் அஞ்சு பாபி ஜார்ஜ் மட்டுமே இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்துள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வெல்லும் வாய்ப்பு கடைசி நொடியில் நழுவினாலும், ஆன்சி சோஜன் வெளிப்படுத்திய போராட்டம் இந்திய தடகள ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.