📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil September 10, 2026 01:32 PM

இணையத்தில் ரகசிய குறியீடுகளுடன் போதைப்பொருள் விற்பனை: மின்

இணையத்தில் ரகசிய குறியீடுகளுடன் போதைப்பொருள் விற்பனை: மின்

கோலாலம்பூர், செப் 10 : மின்-வணிகத் (e-commerce) தளங்களில் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி, அந்த நிறுவனங்களிடம் சிக்காமல் இருப்பதற்காக, கடத்தல்காரர்கள் குறியீட்டு வார்த்தைகளையும் போலி கணக்குகளையும் பயன்படுத்தும் தந்திரமான யுக்தியை, அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

விற்பனையாளர்கள் தங்களது விளம்பரங்களில் 'பெண்டானில்' (fentanil) போன்ற ஆபத்தான செயற்கை போதைப்பொருட்களின் உண்மையான பெயர்களையோ அல்லது அறிவியல் பெயர்களையோ பயன்படுத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

"சில நேரங்களில் அவர்கள் வெவ்வேறு குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு அது என்னவென்றுத் தெரியும், ஆனால் மின்னியல் வர்த்தகத் தளங்களுக்கு அது தடைசெய்யப்பட்ட பொருள் என்று தெரியாமல் போய்விடுகிறது," என்றாரவர்.

இன்று தலைநகரில் நடைபெற்ற ' 2026 ஆசியான் M360' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தகைய தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை நடைபெறாமல் இருக்க, மின்-வணிகச் சேவைகளைக் கண்காணிக்கும் மற்றும் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று ஃபஹ்மி கூறினார்.

"தடைசெய்யப்பட்ட இந்த பொருட்கள் விற்கப்படுவதை இந்தத் தளங்கள் இன்னும் அனுமதிக்கின்றனவா இல்லையா என்பதை நான் தினமும் சரிபார்ப்பேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஒரு மின்-வணிகத் தளத்தின் பிரதிநிதி கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டதாகக் கூறிய ஃபஹ்மி, எனினும் அந்த விவாதத்தின் முடிவுகள் குறித்த முழுமையான விளக்க அறிக்கைக்காகத் தான் இன்னும் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அரசாங்கம் இதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்ற தனது கண்டிப்பான நிலையை வலியுறுத்திய அவர், சட்டவிரோதச் செயல்பாடுகள் கண்டறியப்பட்டப் பின்னரோ அல்லது அது இணையத்தில் வைரலான பின்னரோ மட்டும் உள்ளடக்கங்களை (content) நீக்காமல், மின்-வணிகத் தள நிறுவனங்கள் முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

"இந்த போதைப்பொருள் விற்பனை, பெரும்பாலானவை போலி கணக்குகளின் பின்னால்தான் மறைந்துள்ளன.

தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனைச் செய்வதற்கோ அல்லது இணையச் சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கோ போலி கணக்குகள் உருவாக்கப்படுவதை மின்-வணிகத் தளங்கள் அனுமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றார்.

முன்னதாக, வேப் (vape) திரவத் தயாரிப்புகளுடன் கலந்து விற்கப்படும் பெண்டானில் உள்ளிட்ட செயற்கை போதைப்பொருட்களை விற்பனை செய்ய, மின்-வணிகத் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக வாரியத்திற்கு (MCMC) உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.