📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 14, 2026 11:04 AM

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க எத்தனை நாட்களாகும்?

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க எத்தனை நாட்களாகும்?

சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஒரு மாதம் கடந்தும் விசாரணைக்கு எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், மிலானி தாக்கல் செய்துள்ள மனுவில், 'எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜார்ஜ் டவுண் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், செப்டம்பர் மாதம் தாக்கல் செய்துள்ள மனுவை இதுவரை விசாரணைக்கு எடுக்கவில்லை. மிகவும் செல்வாக்குமிக்க நபரான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்காததால் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், மனுதாரர் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுக்க எத்தனை நாட்களாகும்? என்பது குறித்து ஜார்ஜ் டவுண் சிறப்பு கோர்ட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தார்.