📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 01:04 PM

தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்

தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்

தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தில் தமிழ்நாடு முதலிடம் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை கொள்முதல் செய்ய பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதில் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published : October 13, 2026 at 8:46 PM IST

சென்னை: தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் தான் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆட்சியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத் தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.

மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

மின்துறை அமைச்சர் பஞ்சாப் மாநிலத்தை காண்பிக்க, முதலமைச்சரோ லண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம்.

திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவது தான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?

இது யார் வீட்டுப் பணம்? அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை கொள்முதல் செய்யப் போகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல் தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா? என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து முதல்வர் ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா? எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.

இப்படி, முன்யோசனையும் இல்லாத கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத் தான் தவெக அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.

இவர்களை வழி நடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, லண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இவர்களின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? என்ற அச்சம் தான் மேலோங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.