📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 04:03 PM

டோரதி விமர்சனம் சொன்ன ஜேம்ஸ் வசந்தன்.. கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பு இருக்காம்!

டோரதி விமர்சனம் சொன்ன ஜேம்ஸ் வசந்தன்.. கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பு இருக்காம்!

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக டோரதிதான் தலைப்பு செய்தியாக இருக்கிறது. திருநர்கள் குறித்தும், தன் பாலின ஈர்ப்பாளர்களை மையமாக வைத்தும் கார்த்திக் சுப்புராஜ் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு வரவேற்பு எந்த அளவுக்கு கிடைத்ததோ அதே அளவுக்கு விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் முகநூல் பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் டோரதி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லரில் காட்டப்பட்ட விஷயங்களுக்கு நேர்மாறாக படம் இருந்தது. அதாவது திருநர்கள் குறித்தும், தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும்தான் படத்தின் மைய கதை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முற்போக்காளர்கள் மற்றும் பெரும்பாலானவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கண்டனமும் உண்டு: அதேசமயம் சிலர் படத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் ஒரு தரப்பிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் இந்தியாவில் இப்படியான ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அதில் துளிக்கூட உண்மை இல்லை என்றே கருதப்படுகிறது. எதிர்ப்புகள் எழுந்தாலும் திரைத்துறையிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றன. பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்கூட தனது முகநூல் பக்கத்தில், "சிறு பிள்ளைகளை அழைத்து செல்ல வேண்டாம்; மற்றபடி அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம்" என குறிப்பிட்டிருந்தார்.

ஜேம்ஸின் இன்னொரு பதிவு: இந்நிலையில் படம் குறித்து அவரத் இன்னொரு பதிவும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்தப் பதிவில் அவர், "என்னுடைய "டோரதி" பட விமர்சனத்தை வாசித்துவிட்டு LGBTQ குறித்த சில கேள்விகளை என்னிடம் எழுப்புவீர்கள் என்பதை அறிவேன். அதற்கு நான் விடையளிக்க வேண்டிய பொறுப்பிலும் இருப்பதால் என் கருத்தை சுருக்கமாக இங்கே பதிவிடுகிறேன். என்னுடைய Bigg Boss நிகழ்ச்சி விமர்சனப் பகுதியிலும், ஞாயிற்றுக்கிழமை நேரலையில் இந்தக் கேள்வியை சிலர் வைத்தனர்.

என் கருத்து:

1. ஒரு சமூகத்தில் தனக்கு வேண்டியதைத் தேர்வுசெய்யும் உரிமை யாருக்கும் இருக்கிறது. அது சட்டத்துக்கு உட்பட்டதா இல்லையா என்பதை சட்டம் பார்த்துக்கொள்ளும்.

2. அந்த அடிப்படையில் LGBTQ உரிமைகளை நான் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ வேண்டிய தேவையே எனக்கு இல்லை.

3. அந்தத் தேர்வை வைத்து ஒரு தனி ஆளை பொதுச்சமூகமாக விமர்சிக்கவோ வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது.

4. ஆனால், என்னிடம் தனிப்பட்ட விதத்தில் கருத்தோ ஆலோசனையோ கேட்பவர்களுக்கோ, ஆன்மீக அடிப்படையில் என் நம்பிக்கையைக் கேட்பவர்க்கோ என் பதில் வேறுதான்.

இறைவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார் என்பது பைபில் சொல்வது. நான் அதை ஏற்பவன். அதை மீறிய எதுவும் பைபிலுக்கு (இறைவனுக்கு) முரணானது" என தெரிவித்திருக்கிறார்.