📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 30, 2026 11:03 AM

டோரதி... திருநர் காதலின் புதிய சினிமா மொழி!

டோரதி... திருநர் காதலின் புதிய சினிமா மொழி!

டோரதி... திருநர் காதலின் புதிய சினிமா மொழி!

- கிரேஸ்பானு

‘டோரதி’ திரைப்படம் வெளியானதிலிருந்து, அதன் கதை, திருநர் சமூகத்தின் சித்திரிப்பு, காதல், பாலின அடையாளம், சாதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஒருபுறம், திருநர் வாழ்வியலை மனிதநேயத்துடன் காட்சிப்படுத்தியிருப்பதாகப் பாராட்டுகள் எழுந்திருக்கின்றன. மறுபுறம், இந்தப் படம் குடும்ப அமைப்பு, இயற்கை, சமூக விழுமியங்கள் ஆகியவற்றுக்கு எதிரானது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மாறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில், ‘டோரதி’ உருவாக்கியிருக்கும் உரையாடல் கவனிக்கப்பட வேண்டியது.

திருநங்கையின் காதலும் இயல்பானதே!

தொண்ணூறுகளின் காலகட்டத்தில் திருநர் சமூகம் குடும்பங்களுக்குள்ளேயே புறக்கணிப் பையும், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் ஒடுக்கு முறையையும் எதிர்கொண்டது. அந்தச் சூழலில் நிகழும் கதையாக ‘டோரதி’ அமைந்திருக்கிறது. இன்றும் தொடரும் இந்தப் புறக்கணிப்பின் வரலாற்றுப் பின்னணியை, மனிதர்களின் வாழ்வியலோடு இந்தப் படம் இணைத்துப் பேசுகிறது. ஆதிக்கச் சமூகத்தின் முகத்திரையை வெளிச்சம்போட்டுக் காட்டும் இந்தப் படம், சாதியவாதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழ்த் திரைப்படங்கள் சாதி, வர்க்க அடுக்குமுறைகளைப் பேசியிருக்கின்றன. ஆனால், சாதியும் ‘பால்’ ஆதிக்கமும் இணைந்து ஒரு திருநங்கையை எந்த எல்லை வரை ஒடுக்க முடியும் என்பதை இவ்வளவு நேரடியாகப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடன் பழகிய பால்ய சிநேகிதனைக் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் காட்சி, திருநர் மக்களின் வாழ்க்கையில் இயல்பாக நிகழக்கூடிய ஓர் உண்மையைப் பிரதிபலிக்கிறது. ஆண்–பெண் காதலை மட்டுமே இயல்பான காதலாகக் கொண்டாடிவந்த சமூகத்தில், திருநங்கையின் காதலும் இயல்பானதே என்பதை இந்தப் படம் சொல்கிறது. காதல் தோல்வியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் திருநங்கைகளும், காதலை இழந்து அதன் வலியோடு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அந்தச் சமூக யதார்த்தத்துக்கு மத்தியில், ஒரு திருநங்கையின் காதலை மனிதத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

திரைப்படம் வெளியான பிறகு ஜென் ஸி தலைமுறையினர் முதல் பழைமைவாத சனாதனவாதிகள் வரை பல்வேறு தரப்பினரிட மிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தப் படம் இயற்கைக்கும் குடும்ப அமைப்புக்கும் எதிரானது என்ற பிம்பத்தை உருவாக்கவும் சிலர் முயல்கிறார்கள். இயற்கையின் இயல்பான பல்வகைத் தன்மையைக்கூட அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகி விமர்சிப்பது, ‘டோரதி’ குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. எனினும், இந்தப் படம் பொதுச் சமூகத்தில் எழுப்பியிருக்கும் கேள்விகளும் விவாதங்களுமே அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. வழக்கம்போல ஆண் நடிகர்களுக்குப் பெண் வேடமிட்டு திருநங்கை கதாபாத்திரங்களை நடிக்கவைப்பதற்கு பதிலாக, திருநர் சமூகத்திலேயே இருக்கும் திறமையான கலைஞர்களுக்கு முக்கியக் கதாபாத்திரங்களில் வாய்ப்பளிக்க வேண்டும். கேரளாவின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற நேகா, நாடகக் கலைஞர் ப்ரிதிஷா, இந்தப் படத்தில் நடித்த ஜீவா போன்ற திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பளிப்பது திருநர் சமூகத்தின் கலைத் திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக அமையும்.

இந்தத் திரைப்படத்தின் அடிப்படையான கருத்து, சாதி, பாலினம், மதம், நிறம் போன்ற அடையாளங்களைக் கடந்து மனிதர்களை மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என்பதுதான். ஒரு திருநங்கை தனது பாலின அடையாளத்தை எதிர்கொள்ளும் உளவியலையும், தன்னுள் இருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் தருணங்களையும், அதனுடன் பின்னிப் பிணைந்த காதலையும் இந்தப் படம் நேர்மையாகப் பதிவுசெய்கிறது.

‘டோரதி’ - தமிழ் சினிமாவின் புதிய மைல்கல்!

இதற்கு முன்பு வெளியான ‘பேரன்பு’ திரைப்படம் திருநர் காதலை மேலோட்டமாகத் தொட்டிருந்தாலும், ‘டோரதி’ ஒரு திருநங்கையின் காதலை, அதன் ஆழத்தோடும் உணர்வுகளோடும் பேசுகிறது. இதனால் கேலி, கிண்டல் ஒருபுறமும், ஆக்கபூர்வமான விவாதங்கள் மறுபுறமும் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக, ‘நான் யார்?’ என்பதைக் குறிக்கும் பாலின அடையாளத்துக்கும், ‘நான் யாரிடம் ஈர்க்கப்படுகிறேன்?’ என்பதைக் குறிக்கும் பாலியல் ஈர்ப்புக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்த புரிதலையும் இந்த விவாதங்கள் உருவாக்கிவருகின்றன. எதிர்க்கருத்துகளை முன்வைக்கும் போது தனிநபர் மீதான அவதூறு களையும் இழிவான சொற்களையும் தவிர்க்க வேண்டும். ஒரு கருத்தை எதிர்கொள்வது மற்றொரு கருத்தின் மூலமாகத்தான்; தனிநபர் மீதான அவதூறு அல்லது வன்முறை மொழியின் மூலம் அல்ல.

உலக அளவில் பல்வேறு LGBTQ+ திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில், பாலின அடையாளம், காதல், சாதி, சமூக ஒடுக்குமுறை போன்ற சிக்கலான வாழ்வியல் கேள்விகளைத் துணிச்சலுடன் பேசக்கூடிய சினிமா என்பதை ‘டோரதி’ நிரூபித்திருக்கிறது. இந்தப் படத்தை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இந்தக் கருத்துகளைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கதையையும் காட்சிப்படுத்தலையும் கையாண்டிருக்கிறார். குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் இசை இந்தப் படத்தின் உணர்வுதளத்துக்கு வலு சேர்க்கிறது.

தென்மாவட்டத்தை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியிருப்பது துணிச்சலான முயற்சி. பன்னெடுங்காலமாக ஒடுக்குமுறையை எதிர்கொண்டுவரும் திருநர் சமூகத்தின் காதல், உணர்வு, வாழ்வியல் ஆகியவற்றையும் மனித வாழ்க்கையின் இயல்பான பகுதியாகப் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், படத்துக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், எங்களுக்குச் சற்றேனும் இளைப்பாறுதலை வழங்கிய ‘டோரதி’ திரைப்படக்குழுவினருக்கு திருநர் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்.