தவெக நிர்வாகி வெட்டிப் படுகொலை
தவெக நிர்வாகி வெட்டிப் படுகொலை - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
கொலை செய்யப்பட்ட கண்ணன் 2 மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published : September 6, 2026 at 1:49 PM IST
சென்னை: பெசன்ட் நகர் வண்ணாந்துறை பகுதியில் தவெக நிர்வாகி 6-க்கும் மேற்பட்ட நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 46). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுகவில் 174-வது தெற்கு வட்டக் கழக்ச் செயலாளராக இருந்த கண்ணன், 2 மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு (செப்டம்பர் 5) வெளியே சென்று உணவருந்திவிட்டு ராமசாமி அவென்யூவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு வந்த கண்ணனை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 6-க்கும் மேற்பட்ட நபர்கள், கண்ணனின் அலுவலக வாசல் முன்பு, பட்டா கத்தியால் அவரது தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணனின் உடல் நாளை (செப். 7) பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகிணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற வேலு என்பவரது கொலையில் கண்ணனுக்கு தொடர்பு இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, வேலுவின் கொலை சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கைகாக கண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கண்ணன் சமீபத்தில் தான் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததால், அவரது அரசியல் நடவடிக்கையின் காரணமாகவும் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காணும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, கொலை செய்யப்பட்டுள்ள கண்ணன் 10 வருடங்களுக்கு முன்பு பி பிரிவு ரவுடியாக இருந்ததும், 2 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கிலும் கண்ணன் தொடர்புடையவர் என்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, சாஸ்திரி நகர் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, நேற்றிரவு ஐந்து நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் கொலை சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதில் கொலையாளிகள் கத்தியை கொண்டு வெட்ட வருவதும், அப்போது கண்ணன் அங்கிருந்து தப்பித்து செல்ல முயலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவரை விடாமல் துரத்திச் செல்லும் கும்பல் அவரை கீழே தள்ளிவிட்டு வெட்டி படுகொலை செய்யும் பதற வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.