📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 06, 2026 05:03 PM

தோ பாயோவில் ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

தோ பாயோவில் ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

தோ பாயோவில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றிலிருந்து குத்துவாள், போதைப்பொருள்கள், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை காவல்துறை பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) இரவு 11.50 மணியளவில் தோ பாயோ லோரோங் 7, புளோக் 4க்கு அருகே காவல்துறை அதிகாரிகள் வழக்கமான காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த காரைக் கண்டனர்.

அந்த காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குத்துவாள்கள், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள்கள், போதைப்பொருள் பயன்பாட்டு உபகரணங்கள், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், மின்சிகரெட் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த 31 வயது ஆடவரும் 34 வயது பெண்ணும் அனுமதி இன்றி ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும், போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கும், சுங்கவரி தொடர்பான குற்றச்சாட்டு சிங்கப்பூர் சுங்கத்துறைக்கும், மின்சிகரெட் தொடர்பான குற்றச்சாட்டு சுகாதார அறிவியல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை அதிகாரிகள் காரை சோதனையிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைத் தரையில் அடுக்கி வைத்திருந்த படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. காவல்துறை விசாரணை தொடர்கிறது.