📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 03:32 PM

தூய்மைப் பணி தனியார்மயம்: தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

தூய்மைப் பணி தனியார்மயம்: தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

சென்னை: தூய்மைப் பணியைத் தனியார்மயமாக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்களிடம் தூய்மைப் பணிக்கான ஆலோசனைகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இதனால், தூய்மைப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, சென்னையில் 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் 25 மாநகராட்சிகள் உள்ளன. அவற்றிள் பொது, தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்க தனியார் நிறுவனங்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக திட்ட மேம்பாட்டு மானிய நிதிப் பிரிவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய 12 மாநகராட்சிகளில் திடக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக விரிவான ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது‌.

ஒவ்வொரு தொகுப்புக்கும் ஓர் ஆலோசனை நிறுவனம் என்ற கணக்கில், ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராகத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உழைப்பு உரிமை இயக்கம் சார்பில் சென்னையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் பாரதி, தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

“ஆட்சி பொறுப்புக்கு வந்த 40 நாள்களில் தூய்மைப் பணியைத் தனியாருக்கு அளிக்கத் திட்டமிடுகிறார்கள். அப்படியானால் தமிழகத்தில் எந்த மாதிரியான சமூக நீதி ஆட்சி நடக்கிறது,” என அவர் கேள்வி எழுப்பினார்.

மாநகராட்சிகள் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிலையில், தனியார் பெரு நிறுவனங்கள் எவ்வாறு லாபம் சம்பாதிக்கின்றன என்று கேள்வி எழுப்பிய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசே ஊதியம் அளிக்கலாம் என்றும் இடையில் ஏன் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் கேள்விகளை அடுக்கினார்.