ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. லெபனான் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!
ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. லெபனான் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதலால், உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகமும், சர்வதேச வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக, மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதையடுத்து, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். ஹார்முஸை திறக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தனர். இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்ததால் ஈரான் மீதான கடல்வழித் தடையை அமெரிக்கா நீக்கியது. இதனால் முக்கியப் பகுதியான ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடையின்றித் தொடங்கியது. மேலும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளுக்கும் 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிக்காட்டியதுடன், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இதனால், சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளும் தாமதமாகியுள்ளன. எனினும், அமெரிக்காவின் தலையீட்டால் நேற்று முன்தினம் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையே நேற்று முன் தினம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு, போர் நிறுத்தம் அமலில் இருக்கும் சூழலில், நேற்று காலை தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக லெபனான் அரசு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தசூழலில் தான், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள செய்தியில், “போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலுக்கு முதல் நடவடிக்கையாக ஹார்முஸ் மூடப்படுகிறது. இது போன்றதொரு தாக்குதல்கள் மீண்டும் தொடரும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என ஈரான் எச்சரித்துள்ளது.