📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 21, 2026 04:31 PM

பொறுப்பேற்ற 20-வது நாளில் மதுரை ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றம்

பொறுப்பேற்ற 20-வது நாளில் மதுரை ஆட்சியர் ஆகாஷ் இடமாற்றம்

எழில் சூழ்ந்த வரலாற்று தகவல்கள் புதைந்து கிடக்கும் அரிட்டாபட்டியை பார்வையிட்ட ஆட்சியர் ஆகாஷ்.

மதுரை: அதிகாரிகளை கையெழுத்து வாங்க காத்திருக்க வைக்காமல் முதல் முறையாக ‘இ-ஃபைலிங்’ முறையை நடைமுறைப் படுத்தியதோடு சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்த நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான மதுரை ஆட்சியர் ஆகாஷ், பொறுப்பேற்ற 20 நாட்களில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன்குமார், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மதுரையிலேயே தொடர்வதற்கு தவெக அரசின் அதிகார மையங் களை அணுகி முயற்சி செய்தார். ஆனாலும் பிரவீன்குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நாகப்பட்டினம் ஆட்சியராக இருந்த ஆகாஷ், மதுரை ஆட்சியராக கடந்த ஜூன் 1-ம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் ஆகாஷ், மாவட்டத்தின் பாரம்பரிய இயற்கை எழில் சூழ்ந்த இடங்களையும், சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டு அவற்றை மேம்படுத்தி சுற்றுலா நகரான மதுரையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் சமணர் படுக்கை, மன்னர் திருமலை நாயக்கர் மஹால், அரிட்டாப்பட்டியில் உள்ள 2,200 ஆண்டுகள் பழமையான வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றை மேம்படுத்த திட்டங்களை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். சட்டப்பேரவை தேர்தலால் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, சாதி சான்று, வருமான சான்று தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் கடந்த 3 மாதங்களாக தேங்கிக் கிடந்தன.

இவரது நடவடிக்கையால் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு கண்டனர். ஆகாஷ் ஆட்சியராக பொறுப்பேற்பதற்கு முன்பு வரை, தாசில்தார்கள் முதல் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள், தினமும் கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்கு ஆட்சியர் அறை முன்பாக, அவரைப் பார்க்க மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் கலாச்சாரம் இருந்தது. ஆகாஷ் பொறுப்பேற்றதும் காகித கோப்புகளுக்கு பதிலாக இ-ஃபைலிங் போர் டல் முறையை நடைமுறைப் படுத்தினார். அவற்றை உடனுக்குடன் பார்த்து டிஜிட்டல் கையெழுத்து இட்டு அனுப்பினார்.

இதனால் ஆட்சியர் அறை முன் இது நாள் வரை காணப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் மட்டுமே ஆட்சியரை நேரடியாக பார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. சுற்றுலா நகரமாக மதுரையை மேம்படுத்தும் திட்டம், இன்னும் பல தொலைநோக்கு திட்டங்களை ஆட்சியர் கவனம் செலுத்தி அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பொறுப்பேற்ற 20 நாட்களில் ஆகாஷ் சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட பின்னணியில் பல்வேறு அரசியல் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சிலர் கூறுகையில், வழக்கமாக ஆட்சியராக வரக்கூடியவர்கள், மாவட்ட அரசியலில் அதி்கார மிக்கவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது நடை முறையாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் ஆட்சியர் ஆகாஷூம், தவெக அமைச்சர் நிர்மல்குமார், காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஒரு கட்சியின் மதுரை மாவட்ட முக்கிய அதிகார மையத்தை ஆட்சியர் ஆகாஷ் நேரடியாக சென்று சந்தித்து வாழ்த்து பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

இது குறித்து புகார் வந்ததும், ஆட்சியரை மதுரையின் குறிப்பிட்ட அதிகார மையத்தைப் பார்த்துவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு ஆட்சியர் ஆகாஷ், நான் யாரையும் பார்க்கக் கூடாது என்று நினைக்கவில்லை, அதுவே புகாராக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதன் பிறகு அவரை பார்த்துதான் எனது பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார்.

அதன் அடிப்படையிலேயே தற்போது ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். ஆட்சியர் மாற்றத்தின் பின்னணியில் உள்ளவர், ஏற்கெனவே திமுக அரசிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாறியதும், அவரும், அவரது கட்சியும் தற்போது தவெக அரசுக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை எடுத்துள்ளனர். அதனைப் பயன்படுத்தி இந்த ஆட்சியிலும் அவர் உள்ளூரில் தனது செல்வாக்கை காட்டத் தொடங்கியுள்ளார், என்றனர்.

‘தவெக ஆட்சியில் ஒரே ஒரு அதிகார மையம்தான், அந்த அதிகார மையம் நான்தான்' என்று முதல்வராக பொறுப்பேற்றபோது விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது கவனத்துக்கு செல்லாமலேயே, அவருக்கு கீழ் உள்ள அதிகார மையங்களால் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி மாற்றப்படுவது, அவரது ஆட்சி மீது விமர்சனங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.