📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 08, 2026 10:00 PM

தமிழக அரசின் கட்டிட அனுமதி தொடர்பான அரசாணை வெளியீடு

தமிழக அரசின் கட்டிட அனுமதி தொடர்பான அரசாணை வெளியீடு

தமிழக அரசின் கட்டிட அனுமதி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் 2026-2027-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது, குடியிருப்புக்கட்டிடங்கள், வணிகக்கட்டிடங்கள், சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்ததன் அடிப்படையில் அரசாணை (நிலை) எண். 179, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள் 07.10.2026-இல் பின்வருமாறு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

8,070 சதுர அடி (750 ச.மீ.) FSI பரப்பளவு வரை உள்ள குடியிருப்புக்கட்டிடங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும். இதன்மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே கட்டிட அனுமதி பெறலாம்.

3,230 சதுரஅடி (300 ச.மீ.) FSI பரப்பளவு வரை உள்ள வணிகக்கட்டிடங்களுக்கு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மனுதாரர்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்லாமலேயே கட்டிட அனுமதி பெறுவது எளிதாவதுடன், வணிகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். இதனால், தொழில் செய்வது எளிதாகி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தொழிற்சாலை கட்டிடங்கள்

சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் 26,900 சதுரஅடி (2,500 ச.மீ.) கட்டிடப்பரப்பளவு வரை உள்ள தொழிற்சாலை கட்டிடங்களுக்கு இந்த நடைமுறை கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம், தொழில் முனைவோர் மாவட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல் எளிதாகவும் விரைவாகவும் கட்டிட அனுமதி பெறலாம்.

இம்முறையில், தமிழ்நாடு ஒற்றைசாளர இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுநர்கள் அல்லது கிரேடு-I பதிவு செய்த பொறியாளர் மூன்றாம் தரப்பாக செயல்பட்டு, தள ஆய்வு, ஆவண சரிபார்ப்பு, விதிமுறை இணக்கத்தை உறுதிசெய்தல் மற்றும் மின்னணு சான்றிதழ் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்வார்.

இந்த முன்முயற்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் புரியும் தொழில்முனைவோர் கட்டிட அனுமதியை எளிதாக பெறவும், தொழில் வளர்ச்சி பெருமளவில் உயரவும் வழிவகுக்கும். மேலும் இதன்மூலம், பொதுமக்களும் பெருமளவில் பயன்பெறுவர்.

மேலும், முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் 2026-2027-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது, “குடியிருப்பு மற்றும் வணிகக்கட்டிட அனுமதிக்கான கூடுதல் அதிகாார பகிர்வு உள்ளாாட்சிகளுக்கு வழங்கப்படும்” என அறிவித்ததன் அடிப்படையில் அரசாணை (நிலை) எண்.180, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள் 08.10.2026-இல் பின்வருமாறு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்: குடியிருப்புக்கட்டிட அனுமதிக்கான அதிகாரம், தற்போதுள்ள 10,000 சதுர அடியிலிருந்து 16,140 சதுர அடியாக (1,500 ச.மீ.) உயர்த்தப்படுகிறது.

பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் அமைப்புகளுக்கான கட்டிட அனுமதிக்கான அதிகாரம் தற்போதுள்ள 10,000 சதுர அடியிலிருந்து 12,912 சதுர அடியாக (1,200 ச.மீ.) உயர்த்தப்படுகிறது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வணிகக்கட்டிட அனுமதிக்கான அதிகாரம், தற்போதுள்ள 2,000 சதுர அடியிலிருந்து 5,380 சதுர அடியாக (500 ச.மீ.) உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் அனுமதி கிடைப்பதன் மூலம் சிறுவணிகர்களும் வியாபாரிகளும் பயன்பெறுவர்.