📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 08, 2026 11:04 PM

ட்ரூ ஃபிட்னஸ், ட்ரூ யோகா: 3,300 கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிப்பு

ட்ரூ ஃபிட்னஸ், ட்ரூ யோகா: 3,300 கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிப்பு

ட்ரூ யோகா, ட்ரூ ஃபிட்னஸ் நிறுவனங்களின் கடன் வழக்குகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட நிறுவனக் கலைப்பாளர்களிடம் இதுவரை, கடன் வழங்கியோர் ஏறத்தாழ 3,300 பேர் தங்களின் கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இரு நிறுவனங்களையும் கடன் வழங்கியோரின் தன்னார்வக் கலைப்பு நடவடிக்கைக்குக் கொண்டுவரும் சிறப்புத் தீர்மானங்கள் புதன்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நிறுவனக் கலைப்பாளர்களின் நியமனத்தைக் கடன் வழங்கியோர் உறுதிசெய்தனர். மேலும், தங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆய்வுக் குழுவையும் வாக்களிப்பின் மூலம் அவர்கள் அமைத்தனர்.

நிறுவனங்களின் சொத்துகளை மீட்டெடுப்பதிலும், நிர்வாகத்தைச் சீரமைப்பதிலும் நிறுவனக் கலைப்பாளர்கள் தீவிர கவனம் செலுத்துவர். பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள், விற்பனையாளர்கள், ஊழியர்கள் ஆர்எஸ்எம் சிங்கப்பூர் அமைப்பின் இணையவாசல் அல்லது குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தங்களின் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம்.

ட்ரூ சிங்கப்பூர் குழுமத்தின்கீழ் இயங்கிவந்த ஏழு நிலையங்களும் செப்டம்பர் 10ஆம் தேதி இரவோடு இரவாக திடீரென மூடப்பட்டன. அதுகுறித்து, ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் மின்னஞ்சல் வழி அறிவிப்பு அனுப்பப்பட்டது.

இதனால் 609,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்துவிட்டதாகப் பயனீட்டாளர் சங்கத்திடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

நிதி நெருக்கடியில் சிக்கிய இக்குழுமம், தனது தாய் நிறுவனத்திற்கு 50.6 மில்லியன் வெள்ளி கடன் பாக்கி வைத்துள்ளது.