தமிழ் சினிமாவிற்கென தனி ஓடிடி தளம்
தமிழ் சினிமாவிற்கென தனி ஓடிடி தளம் - தயாரிப்பாளர் சங்க நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அப்டேட்
நிகழ்வில் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பாக இயக்குநர் ராஜா கருப்பசாமி தயாரிப்பாளருக்கான விருதை பெற்று கொண்டார்.
Published : September 27, 2026 at 8:51 AM IST
சென்னை: தமிழ் சினிமாவிற்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6-ஆவது ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 'மூவி டிக்கெட் டிராக்கிங்' (Movie Ticket Tracking - MTT) எனும் செயலி அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக பேசப்பட்டது.
38 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விருது
இதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பான கோரிக்கைகளை மனுவாக, அமைச்சர் ராஜ்மோகனிடம் வழங்கினர். மேலும், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 38 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'மொத ராத்திரி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பாக இயக்குநர் ராஜா கருப்பசாமி தயாரிப்பாளருக்கான விருதை பெற்று கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய இயக்குநர் ராஜா கருப்பசாமி, “என்னை மாதிரியான முதல் படம் இயக்கியுள்ள இயக்குநர்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் மேடையில் பேச வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு ஒரு ஆசை மற்றும் வேண்டுகோளும் உள்ளது.
எப்படியாவது முதல் படத்தை இயக்கிவிட வேண்டும் என்று என்னை விட நல்ல கதைகள் எல்லாம் வைத்திருக்க கூடிய இயக்குநர்கள் பலர் இங்கு உள்ளனர். தயாரிப்பாளர்களாகிய நீங்களும், நல்ல படம் பண்ண வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தீர்கள். அவர்களுக்கு வழி கொடுக்க கூடிய வகையில், ஏதாவது முடிந்தால் செய்யுங்கள்” என தெவித்தார்.
தமிழ் சினிமாவிற்கென ஓடிடி தளம்
அதனை தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியபோது, “சினிமாதுறை மேல் த.வெ.க அரசுக்கு தனி கவனம் உள்ளது. இந்த துறையில் இருந்து வந்தவர் தான் தற்போது முதலமைச்சர் ஆக உள்ளார். இனி மாநில அரசின் சினிமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் சினிமாக்கவுக்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும். இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து பேசி முடிக்க முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசுவோம். இந்த அரசு அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் பெறக்கூடிய அனுமதி போன்று எல்லாம் நவீனமயமாக்கப்பட்டது. சினிமா படப்பிடிப்பு தளத்திற்கு அனுமதி வாங்குவது பெரிய வேலையாக கடந்த காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது.
படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி இனி யாரும் தலைமை செயலகம் வந்து நிற்க வேண்டாம். சிறிய படம், பெரிய படம் என இல்லாமல் சரியான விவரங்கள் கொடுக்கப்பட்டு, அனுமதி கோரப்படும் பட்சத்தில் அனைத்து படங்களுக்கும் தானாக அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தியாகராஜன், பொதுச்செயலாளர் சிவா, பொருளாளர் தனஜெயந்தன், துணை தலைவர்கள் எஸ்.ஆர். பிரபு மற்றும் லலித்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள் கே.எஸ். ரவிகுமார், சசி, ராஜா கருப்பசாமி உள்ளிட்டோர்கள் உடன் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் நடிகை குஷ்பு மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.