📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 27, 2026 03:03 PM

'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம்; காந்தி அருங்காட்சியகம் திறப்பு: நாளை மதுரை வரும் முதலமைச்சர் விஜய்

'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம்; காந்தி அருங்காட்சியகம் திறப்பு: நாளை மதுரை வரும் முதலமைச்சர் விஜய்

மதுரை, செப். 27–தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாளை (திங்கட்கிழமை) மதுரை வருகை தரும் முதலமைச்சர் விஜய், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் எடையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை தொடங்கப்படவுள்ளது. இதற்காக முதலமைச்சர் விஜய் நாளை தனி விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு, பகல் 11.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கு பலத்த வரவேற்பைத் தொடர்ந்து, காரில் புறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்.அங்கு நடைபெறும் விழாவில் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அவர், தொடர்ந்து மகப்பேறு சிகிச்சை வார்டுக்குச் சென்று புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவிக்க உள்ளார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு மருத்துவமனைப் பகுதி முழுவதும் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது; பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் தெரிவிக்கையில், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கவிழா மற்றும் காந்தி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நிகழ்ச்சிகள் தற்போது உறுதியாகியுள்ளன” என்று கூறினார்.மேலும், மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தில் பல மாதங்களாக நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. புதிதாகச் சீரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் அப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து, அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர், மாலை 4 மணிக்கு மேல் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கடந்த 17ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரை மாநகர் முழுவதும் ஐந்தடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து அரசு மருத்துவமனை மற்றும் காந்தி அருங்காட்சியகம் செல்லும் வழிகளில் சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.