📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 04:03 PM

தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் மழைவெள்ளம்; பள்ளங்களில் சிக்கிய வாகனங்களால் நெரிசல்: சேறும் சகதியுமாக மாறிய சாலை

தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் மழைவெள்ளம்; பள்ளங்களில் சிக்கிய வாகனங்களால் நெரிசல்: சேறும் சகதியுமாக மாறிய சாலை

தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் மழைவெள்ளம்; பள்ளங்களில் சிக்கிய வாகனங்களால் நெரிசல்: சேறும் சகதியுமாக மாறிய சாலை

தாம்பரம்: சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் மேற்கு தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் முக்கிய சாலைகளில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு இடங்களில் வாகனங்கள் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக, கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் மேஜர் முகுந்த்வரதராஜன் சாலையில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்த இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்பட்டு சாலை சீரமைக்கப்படாத நிலையில், கனமழையால் அந்த பகுதிகளில் பள்ளங்கள் உருவாகி மழைநீரால் மூடப்பட்டன. இதனால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் செங்கல் ஏற்றிச்சென்ற லாரி, அரசு பேருந்து, கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பள்ளங்களில் சிக்கின. இதன்தொடர்ச்சியாக நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலையிலும் மாநகராட்சி குப்பை வாகனம் பள்ளத்தில் சிக்கியது. இதனால் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பணிகள் முடிந்த பகுதிகளில் சாலையை முறையாக சீரமைக்காமல் விட்டதே கனமழையால் பள்ளங்கள் ஏற்பட காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். மழைநீர் பள்ளங்களை மூடியதால் அவற்றை அடையாளம் காண முடியாமல் வாகனங்கள் அடுத்தடுத்து சிக்கியது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் உதவியுடன் சில வாகனங்கள் பள்ளங்களில் இருந்து மீட்கப்பட்டன.

இதற்கிடையே, கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையிலும் கனமழையால் அதிகளவில் மழைநீர்தேங்கியது. இதனால் சுரங்கப்பாதை வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் கார்களும் தண்ணீரில் சிக்கின. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து மேடவாக்கம்-தாம்பரம் பிரதான சாலைக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக சுரங்கப்பாதை உள்ளதால், மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், சுரங்கப்பாதை பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள சேறு மற்றும் சகதியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணி முழுமையடையாத நிலையில் இருப்பதால், கனமழையின்போது மழைநீர் சாலைகளில் தேங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு, தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மின்மோட் டார்களை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் சாலை பணி நடைபெறும் இடங்களில் பள்ளங்களை முறையாக மூடி சாலையை சீரமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுரங்கப்பாதை மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி மேம்படுத்துவதுடன், மழை பெய்யும் நேரங்களில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.