ராகுல் காந்தியும் விஜய்யும் ஜனநாயகக் காவலர்களா?
நேற்று (அக்டோபர் 10) தலைநகர் டெல்லியைப் போலீசு முகாமாக மாற்றிவிட்டது மோடி–அமித்ஷா கும்பல். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்று கோரிப் போராட வந்த இளைஞர்களைத் தடுப்பதற்காக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசு மற்றும் துணை ராணுவப் படையினரைக் குவித்தது. விமானத்தில் வந்த போராட்டத் தலைவர்கள் விமானத்திற்குள்ளேயே தடுத்து வைக்கப்பட்டனர். ரயிலில் வந்த மாணவர்கள் பாதி வழியில் இறக்கப்பட்டனர். தடைகளையும் மீறித் திரண்ட ஆயிரக்கணக்கானோர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். போராட்டத்தைச் செய்தியாக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் போலீசு விட்டுவைக்கவில்லை.
இத்தனை அடக்குமுறைகளுக்கும் நடுவில், அதே நாளில் சென்னையில் நடந்த அரசியல் நாடகத்தைப் பாருங்கள்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘மாணவர்களின் குரலைக் கேட்பதற்காகச்’ சென்னைக்கு வந்திருந்தார். ஆனால் மாணவர்களைச் சந்திப்பதற்கு முன்பாக, முதலமைச்சர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்று மதிய விருந்தில் கலந்துகொண்டார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பில் கூட்டணியின் எதிர்காலத் திட்டங்களும் தேர்தல் அரசியலும் விவாதிக்கப்படும் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
ராகுல் காந்தியும் விஜய்யும் கூட்டணி அரசியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான், ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சென்னையில் போராடிய இளைஞர்களை விஜய் அரசின் போலீசு பிடித்துச் சென்று மண்டபங்களில் அடைத்து வைத்தது!
ராகுல் மாணவர்களின் குரலைக் கேட்கிறாராம்! விஜய் கைது செய்வாராம்!
டெல்லி பற்றி எரிகிறது; மாணவர்களையும் இளைஞர்களையும் எதிர்க்கட்சியினரையும் தாக்கி, கைது செய்து அறிவிக்கப்படாத அவசரநிலை ஆட்சியை நடத்துகிறது மோடி கும்பல். இந்தச் சூழலில் அப்போராட்டக்களத்தில் முன்னின்று போராடாமல், மாணவர்களின் குரலைக் கேட்பதற்காகச் சென்னைக்கு வந்து, ஏ.சி. மண்டபத்தில் நாடகம் போடுகிறார் ராகுல் காந்தி. ஜனநாயகத்தின் மீது துளியேனும் அக்கறையிருந்தால், தான் வலியுறுத்திய பிரச்சினைக்காக மற்றவர்கள் போராடும்போது ஓடி ஒளிவாரா?
அதே நாளான நேற்று காலை எட்டு மணியளவில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் திரண்ட மாணவர்களும் இளைஞர்களும், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். போராட அனுமதியில்லை என்று கூறி அவர்களைச் சுற்றிவளைத்த போலீசு, வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள மண்டபத்திற்குக் கொண்டு சென்று அடைத்தது.
தாங்கள் முன்கூட்டியே அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், மாற்று இடத்திலாவது போராட அனுமதிக்குமாறு கேட்டனர். மேலும், எந்தக் குற்றச்சாட்டின் கீழ் தங்களைக் கைது செய்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். ஆனால் உரிமைக்காகக் கேள்வி எழுப்பிய இளைஞர்களுக்குப் பதிலளிப்பதைவிட, அவர்களைப் பிடித்துச் செல்வதில்தான் போலீசு குறியாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுக்கக்கூட முதலில் போலீசு மறுத்ததாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெசன்ட் நகரில் மட்டுமல்ல, சிவானந்தா சாலையிலிருந்து தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற அகில இந்திய மாணவர் பெருமன்றம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது போலீசு. இந்தப் போராட்டத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவர்–இளைஞர் அமைப்புகள், த.வெ.க. இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவை! ஆட்சி நடத்துவதற்கு அக்கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் அதே கட்சியின் மாணவர்களும் இளைஞர்களும் உரிமைக்காகப் போராடினால் போலீசைக் கொண்டு ஒடுக்குகிறது விஜய் அரசு.
இத்தனைக்கும் பா.ஜ.க-தான் தனது கொள்கை எதிரி என்று அறிவித்திருப்பவர் விஜய். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் அவரது கட்சி கூறுகிறது. அப்படியானால் அதே நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய இளைஞர்களைக் கைது செய்தது ஏன்? பா.ஜ.க-வை எதிர்ப்பதாக அறிவித்துக்கொண்டு, அதற்கு எதிராகப் போராடும் மக்களின் உரிமையைப் பறிப்பதுதான் விஜய் கூறும் மாற்று அரசியலா? இதைப் பற்றி வாய் திறக்காத ராகுல் காந்தி ஜனநாயகக் காவலரா?
ஞானேஷ் குமார் பதவி பிரச்சினை – த.வெ.க.வின் அடிமைத்தனம்!
கடந்த பத்து நாட்களாக ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்திப் போராடும் மாணவர்களும் இளைஞர்களும் மோடி அரசின் போலீசு அடக்குமுறையை எதிர்கொண்டு தீரத்துடன் போராடி வருகின்றனர். ஆனால் விஜய் மட்டும், இந்தப் பதவி விலகல் கோரிக்கையை ஆதரித்து இதுவரை வாயே திறக்கவில்லை.
அதேசமயத்தில், அவரது அமைச்சரவையில் உள்ள ராஜ்மோகன் செப்டம்பர் 28 அன்று கூறிய கருத்து விஜய்யின் கள்ள மௌனத்தைவிட மோசமானது. ஞானேஷ் குமாரைப் பதவி விலகச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையாம்! ஞானேஷ் குமாரைப் பலிகடாவாக்குகிறார்களாம்!
எப்படியிருக்கிறது விளக்கம்! பா.ஜ.க-காரர்களே யோசிக்க முடியாத கோணங்களில் இருந்தெல்லாம், அக்கட்சியின் கொள்கை எதிரிகள் யோசித்து முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை முழுவதுமே மோசடி என்று கூறும் த.வெ.க., அந்த நடவடிக்கைக்குத் தலைமை வகிக்கும் அதிகாரியைப் பதவி விலகச் சொல்வது மட்டும் திசைதிருப்பல் என்கிறது. அந்தக் கோரிக்கையை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சியினரை துளியும் மதிக்காத, பா.ஜ.க. அடிமைத்தனம் இல்லையா இது?
ஞானேஷ் குமாரைப் பதவி விலகச் செய்யக் கோரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதும், அதே கோரிக்கைக்காகப் போராடுபவர்களைப் போலீசைக் கொண்டு ஒடுக்குவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம்பவங்களா? இவற்றுக்கெல்லாம் விஜய் பதில் சொல்ல வேண்டாமா? ஆட்சியில் பங்கெடுத்துள்ள கட்சிகள் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் லட்சணமா?
பெங்களூருவில் கிழிந்த காங்கிரசின் முகமூடி!
டெல்லியில் பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கும் யோக்கியதை காங்கிரசுக்கு இருக்கிறதா? கர்நாடகத்தில் அதன் சொந்த அரசு என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
அக்டோபர் 10 அன்று பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தியும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை நிறுத்தக் கோரியும் ஏ.ஐ.எஸ்.ஏ. (AISA)மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் போராடினர். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்வதற்கு முன்பே 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பெங்களூரு போலீசு தடுத்து, கைது செய்துவிட்டது.
டெல்லியில் இதே கோரிக்கைக்காகப் போராடியவர்களை ஒடுக்குகிறது பா.ஜ.க. அரசு. சென்னையில் ஒடுக்குகிறது த.வெ.க. அரசு. பெங்களூருவில் ஒடுக்குகிறது காங்கிரசு அரசு.
மூன்று மாநிலங்களிலும் ஒரே கோரிக்கை. மூன்று இடங்களிலும் அந்தக் கோரிக்கைக்காகப் போராடியவர்களுக்கும் ஒரே மாதிரியான அடக்குமுறைதான் பதிலாகக் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர்கள் எல்லாம் அரசியல் ரீதியில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டவர்கள் என நாம் நம்ப வேண்டுமாம்.
இதில் காங்கிரசின் இரட்டை வேடம் இன்னும் அப்பட்டமானது. ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி டெல்லியில் காங்கிரசு தலைவர்கள் போராடியிருக்கிறார்கள். ராகுல் காந்தியும் போலீசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 10 மாலையிலும் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மோடி–அமித்ஷா கும்பலைக் கடுமையாகக் கண்டித்துக் காணொளி வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், அதே கோரிக்கைக்காக காங்கிரசு ஆளும் கர்நாடகத்தில் போராடிய மாணவர்களை அதன் போலீசு தடுத்து வைத்திருக்கிறது! தனது கட்சியின் அரசு செய்திருப்பதை ராகுல் காந்தி கண்டிப்பாரா? அந்த மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசுவாரா?
மோடி அரசின் போலீசு அடக்குமுறையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ராகுல் காந்தி, காங்கிரசு அரசின் போலீசு மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பதிலளிக்க வேண்டாமா? பா.ஜ.க. போராட்டக்காரர்களைத் தாக்கினால் ஜனநாயகப் படுகொலை; காங்கிரசும் விஜய்யும் அதையே செய்தால் சட்டம்–ஒழுங்கு நடவடிக்கையா?
ராகுல்–விஜய் சந்திப்பு: பதவி வெறியே நோக்கம்!
அக்டோபர் 10 அன்று இளைஞர்கள் முன்னெடுத்த ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காங்கிரசு அதிகாரப்பூர்வமாக இணையவில்லை. இதே கோரிக்கைக்காக இடதுசாரிக் கட்சிகளும் பிற எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கியிருந்தன. இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தை ஆதரித்து நேரடியாகப் பங்கேற்க முடியாதா? ஏன் செய்யவில்லை?
அதையும்விட, தனது கூட்டணிக் கட்சி ஆளும் தமிழ்நாட்டில் மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதே நாளில், அந்த முதலமைச்சருடன் ராகுல் காந்தி மதிய விருந்து நடத்த வேண்டிய அவசியம் என்ன?
மாணவர்களின் குரலைக் கேட்பதற்காகப் பெரிய அரங்குகளில் கலந்துரையாடல் நடத்துகிறாராம் ராகுல் காந்தி. ஆனால் மாணவர்கள் வீதியில் இறங்கி உரிமைக்குரல் எழுப்பினால், அவர்களைப் போலீசை வைத்து அடித்து உதைக்கும் விஜய்யுடன் விருந்து சாப்பிட்டு காபி குடிக்கிறார், அதை மகிழ்ச்சி என்கிறார். மாணவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்காக வந்த ராகுல் காந்தி, பெசன்ட் நகரில் போராடிய இளைஞர்களின் பிரச்சினையை விஜய்யிடம் எழுப்பினாரா? கைதுகளைக் கண்டித்தாரா? போராட்டக்காரர்களை விடுவிக்க வலியுறுத்தினாரா? இதையெல்லாம் பேசாமல், மோடிக்கு எதிராகப் பேசுவதன் மூலம்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறாரா?
இந்தச் சந்திப்பிற்குப் பின்னால் இரு கட்சிகளின் தேர்தல் கணக்குகளும் இருக்கின்றன. 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் தொடர்பாகக் காங்கிரசுக்கும் த.வெ.க-வுக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது. ராகுல் காந்தியை முன்னிறுத்துவதா, விஜய்யை முன்னிறுத்துவதா என்ற விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், எதிர்காலத் தேர்தல் திட்டங்களைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர். அதாவது, விஜய்யைக் காக்கா பிடித்து, அவரது செல்வாக்கை வைத்தாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்பதுதான் ராகுலின் கணக்கு. விஜய்க்கோ, ஞானேஷ் குமார் பிரச்சினையில் இன்னும் சில நாட்களுக்குத் தன் மீதான விமர்சனங்கள் வராமல் தடுத்துக்கொள்ளும் தற்காலிக வாய்ப்பு. அவ்வளவுதான், இவர்களது ஜனநாயகத்தின் மீதான பாசம்.
காங்கிரசு தலைவர் கார்கே அக்டோபர் 3 அன்று மக்களவையையும் மாநிலச் சட்டமன்றங்களையும் கலைத்து வாக்குச்சீட்டு முறையில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார். அக்டோபர் 9 அன்று இந்தியா கூட்டணி அளித்த மனுவில், முறைகேடுகள் நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல்களை ரத்து செய்யும் கோரிக்கை என அது சுருங்கியது. ஆனால், இந்தக் கோரிக்கையும்கூட எந்தெந்த மாநிலங்களுக்குப் பொருந்தும் என்பதைப் பற்றி, அக்கூட்டணியினர் யாரும் வாய் திறப்பதில்லை.
இது பா.ஜ.க. வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? கேரள காங்கிரசு ஆட்சிக்கும், தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தும் விஜய் ஆட்சிக்கும் இது பொருந்தாதா? இதுபற்றி விஜய்யும் தமிழ்நாட்டு காங்கிரசும் ஏன் பேச மறுக்கிறார்கள்?
காரணம், இவர்களின் கணக்குகள் எல்லாம் வெறும் பதவி வெறி மட்டுமே. என்ன செய்தாவது, யாருடன் சேர்ந்தாவது பதவிக்கு வர வேண்டும். ஜனநாயகம், நாட்டு நலன், மக்கள் நலன் என்பதெல்லாம் இவர்களின் சிந்தனையிலேயே இல்லை. அதனால்தான் பா.ஜ.க. ஆட்சியை ஒழிக்க வேண்டுமென வாய்கிழியப் பேசினாலும், எந்தவொரு செயல்திட்டத்தையும் முன்வைப்பதே இல்லை. அதாவது எந்த வகையிலும், மக்களுக்குப் பொறுப்புக் கூறாமல் நழுவிக்கொள்ளும் அப்பட்டமான காரியவாதிகள்.
பா.ஜ.க-வை எதிர்ப்பதாகப் பேசிக்கொண்டே, அந்தக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்குவதுதான் ஜனநாயகத்தை மீட்பதற்கான வழியா? டெல்லியில் மோடி–அமித்ஷா அரசின் அடக்குமுறையைக் கண்டித்துக்கொண்டே சென்னையிலும் பெங்களூருவிலும் போலீசு அடக்குமுறையை ஏவுவதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் லட்சணமா? இதுதான் காங்கிரசிடமும் த.வெ.க-விடமும் நாட்டு மக்கள் எழுப்ப வேண்டிய கேள்விகள். நாமெல்லாம் போராடும்போது, அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களாம். போராட்டம் வென்ற பிறகு நோகாமல் பிரதமர் ஆவார்களாம். அடடா, என்னவொரு ராஜ தந்திரம்!
மாணவர்களின் குரலைக் கேட்பதாகக் கூறும் ராகுல் காந்தியும், பா.ஜ.க-வைத் தனது கொள்கை எதிரி என்று சொல்லிக்கொள்ளும் விஜய்யும், முதலில் பெசன்ட் நகரிலும் பெங்களூருவிலும் போராடி, அடிவாங்கிய மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும். தாங்கள் பேசும் ஜனநாயகத்தைத் தங்களது ஆட்சியிலேயே நடைமுறைப்படுத்திக் காட்டட்டும். பிறகு, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கிளம்பலாம்!
தமிழ்ச்சுடர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads