அனுமதி பெறப்படாத வீட்டுப் பணிகள்: எச்சரிக்கை
நிலப்பட்டா பத்திரத்தைக் கொண்ட (Strata-titled) குடியிருப்பு வீட்டுத் திட்டங்களில் அனுமதி பெறப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.
அத்தகைய பணிகள் எனச் சந்தேகிக்கப்படுபவை மேற்கொள்ளப்படுவதாக ஆணையத்திடம் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறப்படாதவை எனச் சந்தேகிக்கப்படும் பணிகள்
ஐந்து சதுர மீட்டருக்கும் மேலான பரப்பளவைக் கொண்ட மெஸனீன் எனப்படும் இரு தளங்களுக்கு நடுவே உள்ள பகுதியை அமைப்பது, லோஃப்ட் எனப்படும் கட்டடத்தின் கூரைக்குக்கீழ் காணப்படும் பகுதியைச் செய்துகொள்வது உள்ளிட்டவை அத்தகைய பணிகளில் அடங்கும். தனியார் வீட்டுக் கட்டடத்தின் கூரையின் மேல் மூடப்பட்ட பகுதிகளை அமைப்பதும் அவற்றில் அடங்கும்.
பொதுவாக அத்தகைய புகார்களை சக குடியிருப்பாளர்கள் அல்லது சம்பந்தப்பட்ட திட்டத்தின் நிர்வாகக் குழுவினர் அளிப்பர் என்று ஆணையம் தெரிவித்தது. குடியிருப்புக் கட்டடங்களின் கட்டமைப்புகளுக்குத் திட்டமிடப்பட்டபடி சோதனை மேற்கொள்ளும்போதும் புகார்கள் வரக்கூடும் என்றும் ஆணையம் சொன்னது.
சந்தேகத்துக்குரியவற்றில் 90 விழுக்காட்டுச் சம்பவங்களில் அனுமதி பெறப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. பல சம்பவங்களில் சம்பந்தப்பட்ட தரப்புகளின்மீது அமலாக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.
“மேலும் விதிமீறல்களைக் கண்டறியும்போது நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். விசாரணை தொடர்வதால் எங்களால் கூடுதல் தகவல்களை அளிக்க முடியாது,” என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். நிலப்பட்டா பத்திரத்தைக் கொண்ட குடியிருப்பு வீட்டுத் திட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான அனுமதி பெறப்படாத அங்கங்கள், நீதிமன்ற நடவடிக்கையின்றி அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அதேவேளை, அமலாக்க நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஏற்ப நடந்துகொள்ளாதோர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நகர மறுசீரமைப்பு ஆணையம் தயங்காது,” என்றும் அவர் எச்சரித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பாதுகாப்பு அச்சுறுத்தல்
நிலப்பட்டா பத்திரத்தைக் கொண்ட திட்டங்களில் அனுமதி பெறப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அது கட்டடக் கட்டமைப்பின் பாதுகாப்பு, காப்புறுதிக் கோரிக்கை தொகை, சொத்துக்கு நிதி வழங்குவது போன்ற அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆணையம் சுட்டியது.
எடுத்துக்காட்டாக மெஸனீன் தளங்கள், கட்டடக் கட்டமைப்பு தாங்கிக்கொள்ளக்கூடியதற்கும் மேலான சுமையை அதன்மீது வைக்கக்கூடும்.