📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 08:03 PM

பரமக்குடி: `பல பெண்களுடன் தொடர்பு; மனைவியைத் தாக்கி சித்ரவதை’

பரமக்குடி: `பல பெண்களுடன் தொடர்பு; மனைவியைத் தாக்கி சித்ரவதை’

பரமக்குடி: `பல பெண்களுடன் தொடர்பு; மனைவியைத் தாக்கி சித்ரவதை’ - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு

பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின்பேரில், பரமக்குடி போலீஸ் டி.எஸ்.பி ஜாபர் சித்திக் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி டி.எஸ்.பி-யாக இருந்த ஜாபர் சித்திக், முன்னதாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு மூலம் காவல் பணிக்கு நேரடியாகத் தேர்வானவர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டி.எஸ்.பி-யாகவும் பணிபுரிந்துள்ளார். அரக்கோணத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதிதான் பரமக்குடிக்குப் பணிமாறுதலானார்.

இந்த நிலையில்தான் அவரின் காதல் மனைவி ஷோபனா ஆகஸ்ட் 4-ம் தேதி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஜாபர் சித்திக் மீது புகாரொன்றை அளித்தார். அதில், பல பெண்களுடன் கணவர் ஜாபர் சித்திக்கிற்குத் தொடர்பு இருப்பதாகவும், தன்னைக் கடுமையாகத் தாக்கி துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரின்பேரில், வேலூர் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி வழக்குப் பதிவு செய்து பரமக்குடி டி.எஸ்.பி முகாம் அலுவலகத்துக்குச் சென்று ஜாபர் சித்திக்கிடம் விசாரணை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதி ஜாபர் சித்திக் அதிரடியாக `சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஜாபர் சித்திக்கைக் கைது செய்யக்கோரி மனைவி ஷோபனா டி.ஜி.பி அலுவலகம் சென்றும் புகாரளித்தார். இதையடுத்து, டி.ஜி.பி அலுவலக உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஜாபர் சித்திக்கை நேற்று இரவு கைது செய்து அழைத்து வந்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

ஜாபர் சித்திக் அரக்கோணம் டி.எஸ்.பி-யாக இருந்தபோதே பல்வேறு சர்ச்சை விவகாரங்களில் சிக்கியவர். குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழித்ததோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகவும் புகார்கள் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது தி.மு.க-வினருக்கு ஆதரவாக டி.எஸ்.பி ஜாபர் சித்திக் செயல்பட்டதாக அப்போது அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ சு.ரவி தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜாபர் சித்திக்கின் மனைவி ஷோபனாவுக்குச் சொந்த ஊர் அரக்கோணம். அவரின் தாய் தி.மு.க-வின் கவுன்சிலராகவும் இருந்தவர். இந்த அரசியல் பின்னணி காரணமாகத்தான் தி.மு.க ஆட்சியில் அரக்கோணம் டி.எஸ்.பி-யாக இருந்த ஜாபர் சித்திக் பல்வேறு அட்டூழியச் செயல்களுக்குத் துணைப்போனதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.