📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 03:00 PM

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கானா பாடல்களுக்காகப் புகழ்பெற்ற இவர் ரஜினி, விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கானா இசைப் பாடல்கள் பல இயற்றி இசையமைத்தவர் தேவா.

தமிழ்த் திரையுலகில் கானா இசைப் பாடல்களுக்கு புத்துயிர் பாய்ச்சியவர் தேவா என்றால் அது மிகையாகாது. கானா பாடல்கள் மட்டுமல்ல அவர் இசையில் மெல்லிசைப் பாடல்களும் இதயத்தை வருடக் கூடியவை. அதனால் தான் அவர், ‘தேனிசைத் தென்றல்’ தேவா என்று அழைக்கப்பட்டார்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த தேவாவுக்கு இன்று காலை 8.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் 10.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

திரைப்படத்துக்கு வருவதற்கு முன்பு தேவா தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சியில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாவின் சகோதரர்கள் இளையராஜாவுடனும் பிற இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களிலும் இசைக் கருவிகளை வாசித்து வந்தனர்.

தேவா ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படம் மூலம்1989-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் தான் தேவாவை தமிழகத்தின் பட்டி தொட்டிகள் வரை கொண்டு சேர்த்தது.

இசையமைப்பாளர் எம். எஸ்.விஸ்வநாதன் தான் தேவாவை ‘தேனிசைத் தென்றல்’ என்று அழைத்தார். அதுவே அவருக்கு அடைமொழியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ 400-கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு தேவா இசையமைத்திருக்கிறார். இன்றளவும் ரஜினி படங்களில் அவர் டைட்டில் திரையாக்கும்போது இன்ட்ரோ காட்சிகளில் தேவாவின் இசை தான் ஒலிக்கிறது.

நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோருக்கும் தேவா பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆசை (1995) காதல் கோட்டை (1996) நேருக்கு நேர் (1997) நினைத்தேன் வந்தாய் (1998) பிரியமுடன் (1998) வாலி (1999) குஷி (2000) போன்ற படங்கள் தேவா இசையில் வெளியானவை.

இவை தவிர பக்திப் பாடல்களுக்கும் பெயர் பெற்றவர் தேனிசைத் தென்றல் தேவா.

அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.