📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 02:01 PM

Ranabaali Review: ரணபலி விமர்சனம்.. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் மெகா முயற்சி என்ன ஆனது?

Ranabaali Review: ரணபலி விமர்சனம்.. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் மெகா முயற்சி என்ன ஆனது?

சென்னை: தொடர்ந்து விஜய் தேவரகொண்டா வித்தியாசமான மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு தொடர்ந்து கிடைக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தனது கணவருடன் ஜோடி சேர்ந்து அவருக்கு எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என நினைத்த ராஷ்மிகாவின் நல்ல உள்ளம் தெளிவாக தெரிகிறது.

ஆனால், ஷியாம் சிங்கா ராய் படத்தையே பல இடங்களில் சொதப்பி எடுத்த ராகுல் சங்கிரித்யனை நம்பி விஜய் தேவரகொண்டா மீண்டும் தலையை கொடுத்த நிலையில், காந்தாரா மாறி ஒரு கிளைமேக்ஸ் வச்சிருக்கேன் என சொல்லி ஏமாற்றிவிட்டரா? என்றே தெரியவில்லை. ரசிகர்கள் தியேட்டரிலேயே புலம்பத் தொடங்கி விட்டனர்.

மம்மி படத்தின் வில்லன் அர்னால்ட் வாஸ்லூவை அழைத்து வந்து மறுபடியும் லைகர் படத்தில் மைக் டைசனை அழைத்து வந்து பண்ண தப்பையே விஜய் தேவரகொண்டா செய்து விட்டார். ரணபலி படத்தின் கதை, பாசிட்டிவ் மற்றும் பலவீனங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

ரணபலி கதை: 1800களில் சிங்கனமலா பகுதியில் வாழும் மக்கள் போற்றும் பத்ரமல்லண்ணாவின் ஆசியுடன் ரணபலி என்ற போத்துலய்யா (விஜய் தேவரகொண்டா) பிறக்கிறார். பிறந்தவுடன் அசைவற்று இருக்கும் அக்குழந்தைக்கு பத்ரமல்லண்ணா உயிர் கொடுத்து 'ரணபலி' என்று பெயரிடுகிறார். அதே நேரத்தில், ரணபலியின் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த ஒரு அதிர்ச்சி தரும் தகவலை அவனது தாயாரிடம் (ஈஸ்வரி ராவ்) அவர் கூறுகிறார். இறைவனின் அம்சத்தோடு பிறந்த ரணபலிக்கும், ஜெயம்மாவுக்கும் (ராஷ்மிகா மந்தனா) திருமணம் நடைபெறுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அக்கிரமங்களால் அந்தப் பகுதியில் கொடூரமான பஞ்சம் ஏற்படுகிறது. ராயலசீமா பகுதியில் மக்கள் விளைவித்த தானியங்களையும் உணவுப் பொருட்களையும் வெளிநாடுகளுக்குக் கடத்த பிரிட்டிஷ் கமிஷனர் (அர்னால்ட் வாஸ்லூ) சதி செய்கிறார். மக்களின் பசி கொடுமையைக் கண்டு மனம் கலங்கும் ரணபலி, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராகப் புரட்சி செய்கிறார். பிரிட்டிஷாரின் சதியை ரணபலி எவ்வாறு முறியடித்தார், சிங்கனமலா மக்களின் பஞ்சத்தைத் தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன, இறுதியில் ரணபலியின் சாபம் என்ன ஆகிறது என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஈஸ்வரி ராவ் பிரசவ வலியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதும், அக்குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுவதும் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளன. படத்தின் முதல் 15 நிமிடங்கள் சற்று மெதுவாகவும், காட்சிகள் பலவீனமாகவும் நகர்வது சிறிய ஏமாற்றத்தைத் தருகிறது. இருப்பினும், அதற்குப் பிறகு இயக்குநர் ராகுல் சாங்க்ரித்யான் கதையை நகர்த்திய விதத்தில் பெரிய குறைகள் எதுவும் தெரியவில்லை.

இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தை படமாக்கிய நிலையில், முழுக்க முழுக்க உண்மைக் கதையாக இல்லாமல், டைரக்டருக்கு தோன்றிய புனைவு கதையை உண்மை சம்பவங்களுடன் முடிச்சுப் போட பார்த்துள்ளார்.

முதல் பாதியில் ரணபலி - ஜெயம்மா இடையிலான காதல் மற்றும் திருமண வாழ்க்கை காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. ஏதையா சாமி பாடல் ரசிக்க வைக்கிறது. திருமணத்துக்கு முன்பாக 2 பேரும் 2 படங்களில் ஜோடி போட்டு நடித்த நிலையில், திருமணத்துக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடித்த முதல் படமாகவும் ஜோடி போட்ட 3வது படமாகவும் மாறியுள்ளது.

ஆனால், கதையின் விவரிப்பு அதிகமாக இருப்பதால் காட்சி நகர்வு சற்று மெதுவாக இருப்பது போல் தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் ராஷ்மிகாவின் கர்ப்பிணி சம்பந்தப்பட்ட காட்சி சிறப்பான திருப்புமுனையாக அமைகிறது. ஆனால் அந்த காந்தாரா பாணி கிளைமேக்ஸை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.

பிளஸ்: ரணபலியாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா அந்த கதாபாத்திரத்துக்காக கொஞ்சம் ஓவர்டோஸ் நடிப்பை போட்டு இருந்தாலும், அது அந்த கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் தேவைப்படுவதால் அதை அவர் மெனக்கெட்டு செய்துள்ள விதம் பாராட்ட வைக்கிறது. ராஷ்மிகா மந்தனா கொஞ்ச நேரம் வந்தாலும் ஸ்கோர் செய்து விடுகிறார். ஈஸ்வரி ராவ், அர்னால்டு வாஸ்லூ, ஷீலா ராஜ்குமார் படத்திற்கு பலமாக செயல்பட்டுள்ளனர். ஜிஷ்ணு பட்டாசார்ஜி மற்றும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்க்கிறது; காட்சிகள் மிகவும் இயல்பாகவும் தத்ரூபமாகவும் படமாக்கப்பட்டுள்ளன.

மைனஸ்: ஆனால், கதைக்குத் தேவையான அளவிற்கு அஜய் - அதுல் இசை அமையாததால், சில காட்சிகள் முழுமையாக மிளிரவில்லை. படத்தொகுப்பில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன; படத்தின் நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள், இரக்கமே இல்லாமல் 20 நிமிடத்தை நீக்கி படத்தை நறுக்கென முடித்திருந்தால் இன்னமும் கல்லா கட்டியிருக்கும்.

பார்க்கலாமா? வேண்டாமா?: ரணபலி படத்தில் சில பல குறைகள் இருந்தாலும், படத்திற்காக மெனக்கெட்டு பெரிய உழைப்பை படக்குழுவும் விஜய் தேவரகொண்டாவும் கொட்டியுள்ளனர். லைகர் படத்தைப் போல பிளேடு போடாமல் இந்தியர்கள் வெள்ளையர்களிடம் பட்ட சிரமத்தை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்த விதத்திற்காகவே இந்த படத்தை ஒரு முறை முயற்சி செய்யலாம். இயக்குநர் இன்னமும் கொஞ்சம் ரசிகர்களை மனதில் வைத்து படத்தை செதுக்கியிருந்தால் விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமாகவே இது அமைந்திருக்கும்.