சிங்கப்பூர்
எரிமலை வெடித்ததால் மூடப்பட்டிருந்த இந்தோனீசியாவின் முதன்மை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) ஜகார்த்தாவுக்கு கூடுதலாக எட்டு விமானங்களை இயக்க உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தெரிவித்தது.
சிங்கப்பூரில் இருந்து ஜகார்த்தாவிற்கு நான்கு விமானங்களும் ஜகார்த்தாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் நான்கு விமானங்களும் இயக்கப்படும் என்று சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.
அந்தக் கூடுதல் விமானங்கள் இருக்கை வசதியைப் பொறுத்தே அமையும் என்றும் அது குறிப்பிட்டது.
சிங்கப்பூர், ஜகார்த்தா இடையே விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் விமானங்களில் படிப்படியாக முன்பதிவு செய்யப்படும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அதிகாலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஜகார்த்தாவிலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 5.25 மணிக்குப் புறப்படவிருந்த எஸ்கியூ951 விமானம் ரத்து செய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
மேலும், செவ்வாய்க்கிழமை காலை புறப்பட வேண்டிய ஆறு விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அவற்றின் புறப்பாட்டு நேரங்கள் பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டதாகவும் மற்ற அனைத்து விமானங்களும் தற்போது திட்டமிட்டபடி இயங்கி வருவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.
சூழ்நிலை அடிக்கடி மாறுவதால், விமானப் பயணம் குறித்த அண்மைத் தகவல்களை தனது ‘Flight Status’ பக்கம் வாயிலாகப் பயணிகள் தெரிந்துகொள்ளலாம் என்று அந்த விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவில் இருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ தொலைவில் உள்ள அனாக் கிரக்கத்தாவ் எரிமலை சனிக்கிழமையன்று (செப்டம்பர் 5) வெடித்து, லாவாவையும் எரிமலைச் சாம்பலையும் கக்கியதைத் தொடர்ந்து, வார இறுதியில் இந்தோனீசியாவின் எட்டு விமான நிலையங்கள் தங்களின் சேவைகளை நிறுத்தின.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை தனது 18 விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரத்து செய்திருந்தது.