📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 06, 2026 03:01 PM

பேருந்து கட்டண உதவித் தொகை : 3,452 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பயன்

பேருந்து கட்டண உதவித் தொகை : 3,452 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பயன்

ஷா ஆலம், செப் 6: இவ்வாண்டின் சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பேருந்து கட்டண உதவித் தொகை திட்டத்தின் கீழ் 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த, 3,452 வசதி குறைந்த மாணவர்கள் பயனடைந்தனர்.

அந்த பேருந்து கட்டண உதவி, 12 லட்சம் ரிங்கிட் மதிப்பை உட்படுத்தியதாகும்.

பி40 குடும்பங்கள் மற்றும் தோட்டப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களது பிள்ளைகளின் பள்ளிப் போக்குவரத்துச் செலவைச் சமாளிப்பதற்காக , இந்த உதவி, 300 ரிங்கிட் வவுச்சர் (voucher) வடிவில் வழங்கப்படுவதாக , வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு தெரிவித்தார்.

" மாணவர்கள் பொருளாதாரத் தடையின்றி பள்ளிக்கு வருவதையும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியான கல்வியைப் பெறுவதை உறுதி செய்யவும் இந்த உதவி மிகவும் அவசியமானது," என்று அவர் கூறினார்.

ஷா ஆலம், சுல்தான் அப்துல் அஜிஸ் ஜுப்லி பேராக் மண்டபத்தில் இன்று மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு பாப்பாராயுடு செய்தியாளர்களிடம் பேசினார்.

மாதாந்திர குடும்ப வருமானம் 3,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஒரு குடும்பத்திற்கு ஒரு வவுச்சர் என்ற அடிப்படையில் இது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாப்பாராயுடு கூறினார்.

"மாணவர்கள் இந்த உதவிக்குத் தகுதி பெற, அவர்களின் பெற்றோர் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருப்பது கட்டாயமாகும்," என்றாரவர்.

இதற்கிடையில், இந்த உதவித் திட்டத்திற்குத் தகுதியிருந்தும் இன்னும் சில மாணவர்களுக்கு இந்த உதவி கிடைக்கவில்லை என்ற புகார்கள் தங்களுக்கு வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில், மேலும் பல பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலனை விரிவுபடுத்துவதற்கான சிறந்த வழிமுறைகளைக் கண்டறிய மாநில அரசு இப்புகார்களை உன்னிப்பாக ஆராயும் என்றும் அவர் கூறினார்.